திரு அவதாரப் படலம் - 288
சோதிடர் நாட்கணித்தல்
288.
ஓடினர் அரசன்மாட்டு. உவகை கூறி நின்று
ஆடினர். சிலதியர்; அந்தணாளர்கள்
கூடினர்; நாளொடு கோளும் நின்றமை
நாடினர்; ‘உலகு இனி நவை இன்று’ என்றனர்.
சிலதியர் அரசன் மாட்டு ஓடினர்- பணிப்பெண்கள் தசரத
மன்னனிடம் ஓடிச் சென்றனர்; உவகை கூறி நின்று ஆடினர் - மக்கட்
பிறந்த செய்தியை மன்னருக்குச் சொல்லி நின்று களித்து ஆடினர்;
அந்தணானர்கள் கூடினர் - அரண்மனை வேதியரெல்லாம் ஒருங்கு
கூடினார்கள்; நாளொடு கோளும் நின்றமை -நாள்களும். கோள்களும்
நின்ற தன்மையை; நாடினர் -ஆராய்ந்து அறிந்து; உலகினி நவை
இன்று என்றனர் - இப்புத்திரர்களது பிறப்பினால் இவ்வுலகம்
தீமையிலிருந்து காக்கப் பெறும் என்றனர்.
மாடு: அண்மை. உவகை: மகிழ்ச்சி. சிலதியர்: பணிப்பெண்கள்.
நாள்:நட்சத்திரம். கோள்: கிரகம் (சூரியன் முதலான ஒன்பது
கோள்கள்). அந்தணாளர்கள் தமது கணித நூற்புலமையால் நாளும்
கோளும் நின்ற நிலையை ஆராய்ந்து - இப்பிள்ளைகளின் பிறப்பால்
உலகம் இனி நன்மை அடையும் என்றனர். பணிப் பெண்கள்
பிள்ளைகள் பிறந்த செய்தியை மன்னருக்குத் தெரிவித்தனர்
என்பதும். அந்தணாளர்கள் நாளையும். கோளையும் ஆய்ந்தறிந்து
இனி உலகம் நன்மை அடையும் என்றனர் என்பதும் கூறப்பட்டது.
நவை: குற்றம்;தீமையுமாம். 108
