திரு அவதாரப் படலம் - 285

bookmark

சுமித்திரை இலக்குமணனைப் பெறுதல்

285.

தளை அவிழ் தருவுடைச் சயிலகோபனும்.
கிளையும். அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற.
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வுற.
இளையவற் பயந்தனள். இளைய மென் கொடி.
 
தளை   அவிழ்தருஉடை  -  அரும்புகள்  மலரும் கற்பகமரத்தை
உடைய;   சயில   கோபனும்   -   மலைகளைச்சினந்து.  அவற்றின்
இறகுகளைத்  துண்டித்த  இந்திரனும்; கிளையும் அந்தரமிசை கெழுமி
ஆர்ப்பு  உற  - அவனது தமர்களான தேவர்களும் வானுலகிலே கூடி
ஆரவாரம்  செய்யவும்;  அளைபுகும்  அரவினோடும் - புற்றில்புகும்
பாம்பாகிய  ஆயில்யத்தோடு; அலவன் வாழ்வு உற -நண்டாகிய கடக
ராசியும்  வாழ்வுபெற; இளையமென்கொடி இளையவன் பயந்தனள் -
கோசலை.   கைகேயி   இருவருக்கும்    இளையவளாகிய   மெல்லிய
கொடிபோன்ற சுமித்திரை இளையவனைப் பெற்றாள்.

தளை:     கட்டு (மலர்க்கட்டு). அரும்பு  தரு: மரம். சயிலம்: மலை.
கோபன்:   சினந்தவன்.  கிளை:  உறவினர்   (உவமை  யாகு  பெயர்).
கெழுமி:  நெருங்கி.  அனை:  புற்று.  அலவன்:   நண்டு. இளையவன்:
ராமனுக்கு  இளையவனான  இலக்குவன்.  கொடி:   கொடிபோன்றவள்
(உவமையாகுபெயர்).   சுமித்திரை   ஆயில்ய   நட்சத்திரத்தில்.  கடக
ராசியில்      ஒரு       மகனைப்      பெற்றாள்.      ஆயில்யம்
ஆதிசேடனுக்குரியதென்பர். ஆதிசேடன்  அம்சமான இலக்குவன் இந்த
நட்சத்திரத்தில்     பிறந்தது     பொருத்தமாகும்.     சுமித்திரையை
‘இளையமென்கொடி’  என்தால். மூவரிலும்  இளையவள்  சுமித்திரையே
என்பது கம்பன் கருத்தாதல் காண்கிறோம்.                     105