திரு அவதாரப் படலம் - 282

bookmark

282.

சித்தரும். இயக்கரும். தெரிவைமார்களும்.
வித்தக முனிவரும். விண்ணுளோர்களும்.
நித்தரும். முறை முறை நெருங்கி ஆர்ப்புற.
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே.
 
சித்தரும்   இயக்கரும்    தெரிவைமார்களும் -   சித்தர்களும்.
இயக்கர்களும்.  அவரவர்களது  தேவியர்களும்; வித்தக முனிவரும் -
அறிவில்  சிறந்து  விளங்கும்  முனிவர்களும்; விண்ணுளோர்களும் -
விண்ணுலகத்தில்  உள்ளவர்களும்;  நித்தரும் முறைமுறை  நெருங்க
ஆர்ப்புற - நித்திய சூரிகளும் முறைப்படி கூடி ஆரவாரம்  செய்யவும்;
நீள்   தருமம்   தத்துறல்  ஒழிந்து  ஓங்க - நெடிய தருமதேவதை
இடையீடின்றிப் பெருகி வளரவும்.

சித்தர்.  இயக்கர்: தேவர்களுக்குள் ஒருவகையினர். வித்தகம்: அறிவு
(ஆற்றலுமாம்).  நித்தர்:  பரமபதத்தில்   திருமாலை  விட்டு  நீங்காது
வாழும் நித்திய சூரிகள். தத்துறல்: வளர்ச்சிகுன்றல்.

‘தெரிவை’    இங்குப் பருவப் பெயராகாமல் பெண்ணைக் குறித்தது.
நித்தியர்  என்றது  முக்தருக்கும்  உபலட்சணம்   திருமால்  ராமனாக
அவதரிக்கும்   கருணைப்பெருக்கை  எண்ணி.   சித்தர்  முதலானோர்
மகிழ்ச்சியில்  திளைத்தனர்  என்பது கருத்து.  நித்திய  சூரிகள் வாழும்
பரமபதம்.  தேவர்கள்  வாழும்  வானுலகத்திலும்   உய்ாந்தது என்பது
குறிப்பு.     நீள்    விசும்பு    எனத்தேவருலகையும்.     பெருநிலம்
எனப்பரமபதத்தையும்    கூறும்    திருமங்கை   யாழ்வார்    பாடல்
நினைவுகூறத் தக்கது.                                      102