திரு அவதாரப் படலம் - 281

bookmark

கோசலை இராமனைப் பெறுதல் (281-283)

281.

ஆயிடை. பருவம் வந்து அடைந்த எல்லையின்.
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட.
வேய் புனர்பூசமும். விண்ணுளோர்களும்.
தூய கற்கடகமும். எழுந்து துள்ளவே.
 
ஆயிடை   பருவம் வந்து அடைந்த எல்லையின் - அப்போது.
மகப்பேற்றுக்குரிய   பருவம்  வந்து  சேர்ந்த  அந்தக்காலத்தில்;  மா
இரும்மண்   மகள் மகிழ்வின்  ஓங்கிட  -  மிகப்பெரிய  நிலமகள்
மகிழ்ச்சியில் ஓங்கவும்; வேய்புனர் பூசமும் -  பொருந்திய ‘புனர்பூசம்’
என்னும்  விண்மீனும்;  விண்ணுளோர்களும்  -  வானுலகில்  வாழும்
தேவர்களும்;  தூயகற்கடகமும்  -  தூய்மையானதாகிய கடக ராசியும்;
எழுந்து துள்ள - (மகிழ்ச்சியினால்) எழுந்து துள்ளி ஆடவும்.

அ+ஆயிடை;     செய்யுட்குரிய நீட்டல்  விகாரம்.  பருவம்: காலம்.
எல்லை:  போது;  அளவு.  மாயிரு: ஒரு பொருட்  பன்மொழியாம். மா:
மிகுதி   (பெரிய).   இரு:   பெரிய  மிகப்பெரிய   என்னும்  பொருள்
உடையதாம்.

ராமாவதாரத்தால்     தன்னையும். தன் மக்களையும் பற்றிய துயரம்
தீரும்  என்பதால்  மண்மகள்  மகிழ்ந்தாள்   என்பது  கருத்து. வேய்:
மூங்கில்  எனவே மூங்கில் போன்ற புனர்பூசம்  என்பதும்  பொருளாம்.
ராமன்  அவதரித்த  நாள்  புனர்பூசம்.  ராசி கடகம்  என்பதால் தமது
பேற்றினை  நினைந்து  அவை  மகிழ்ந்து எழுந்து  துள்ளின  என்றார்.
இதுமுதல்  மூன்று பாடல்கள் குளகம். துள்ள. ஓங்க  பயந்தனள் என்று
முடிவுபெறும்.                                            101