திரு அவதாரப் படலம் - 273
தசரதன் அவையை அடைதல்
273.
முருடொடு பல் இயம் முழங்கி ஆர்த்தன;
இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின;
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி.
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான்.
முருடு ஓடு பல்இயம் - மத்தளத்துடன் கூடிய பலவகை
வாத்தியங்களும்: முழங்கி ஆர்த்தன - மிக முழங்கி ஒலிக்கலாயின;
இருள் தரும் உலகமும் - (அரக்கரால்) இருளடைந்திருந்த உலக
மக்களெல்லாம்; இடரின் நீங்கின - தங்கள் துன்பங்களிலிருந்து
நீங்கினர்;தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீ்ர்ந்துழி -தெளிவைத்
தரும் வேள்வியின் கடமைகள் யாவும் செய்து தீர்ந்தபின்னர்; அரசன்
அருள் தரும் அவையில் வந்து எய்தினான் - அரசனாகிய தயரதன்
அருள் பொருந்திய அரசவைக்குச் சென்று சேர்ந்தான்.
‘முருடு’: ஒருவகைத் தோற் கருவி (மத்தளம் என்பர்). இயம்:
வாத்தியம். முழங்கி ஆர்த்தல்: மிக்கொலித்தல். இருள்: அரக்கரால்
உண்டான இடர். தெருள்: தெளிவு. மகப்பேறு உண்டு என்னும்
தெளிவைத் தந்த வேள்வி என்பது பொருள். அருள் தரும் அவை:
அருள்மிக்க அறிஞர் பேரவை. அருள் உணர்ச்சி தரக்கூடிய அவை
எனினுமாம். ‘உழி’ இடம் (காலம்) பொருளைச் சுட்டி நின்றது. உலகம்:
இடவாகு பெயராக மக்களை உணர்த்தும். 93
