திரு அவதாரப் படலம் - 272
தசரதன் யாகசாலையினின்று எழுதல்
272.
வாம் பரி வேள்வியும். மகாரை நல்குவது
ஆம் புரை ஆகுதி பிறவும். அந்தணன்
ஓம்பிட முடிந்தபின். உலகு காவலன்
ஏம்பலோடு எழுந்தனன் - யாரும் ஏத்தவே.
வாம்பரி வேள்வியும்- தாவிச் செல்லும் குதிரை வேள்வியான
அசுவமேத யாகத்தையும்: மகாரை நல்குவது ஆம் புரை ஆகுதி
பிறவும் - மக்கட் பேற்றையளிக்கும் உயர்ந்த ஆகுதியையும்
அதற்கேற்ற பிற வழிபாடுகளையும்; அந்தணன் ஓம்பிட முடித்தபின்-
கலைக்கோட்டு முனிவன் செய்து முடித்தபின்; உலகு காவலன் -
நாடாளும் வேந்தனாகிய தயரதன்; யாரும் ஏத்தவே ஏம்பலோடு
எழுந்தனன் - எல்லோரும் போற்றும்படி மகிழ்வோடு எழுந்தான்.
வேள்வி முடிந்தபின் மன்னன் வேத்தவைக்கு வருதலைக் கூறுவது
இப்பாட்டு. வாம் + பரி: வாவும் என்பதன் இடை குறைத்து வாம் என
நின்றது. வாவுதல். தாவிச் செல்லுதல். மகார்: புத்திரர் (மகன்
என்பதன் பன்மை). புரை: உயர்ச்சி. ஓம்பிட: ‘இடு’ ஆற்றல்
உணர்த்தும் துணைவினையாம்; காவலன்: காத்தலின் வல்லவன்.
ஏம்பல்: மகிழ்ச்சி.
அந்தணன் ஆகுதி முடித்தபின் - காவலன் யாரும் ஏத்த
எழுந்தனன் என்பது முடிவு. பரி வேள்வி: அசுவமேத யாகம். பிறவும்:
மகவருள் ஆகுதியுடன் தொடர்புடைய பிற பூசனைகளாம். அந்தணன்:
செந்தன்மையுடைய கலைக்கோட்டு முனிவன். 92
