திரு அவதாரப் படலம் - 269

bookmark

தசரதன் கைகேயிக்கு ஒருபங்கு கொடுத்தல்

269.

கைகயன் தனையைதன் கரத்தும். அம் முறைச்
செய்கையின் அளித்தனன். தேவர் ஆர்த்து எழ-
பொய்கையும். நதிகளும். பொழிலும். ஓதிமம்
வைகுறு கோசல மன்னர்மன்னனே.
 
பொய்கையும்   நதிகளும்   பொழிலும்   -  பொய்கைகளிலும்.
ஆறுகளிலும்.   சோலைகளிலும்;   ஓதிமம்   வைகுறு   - அன்னப்
பறவைகள் வாழ்கின்ற; கோசல மன்னர் மன்னன் - கோசல நாட்டின்
பேரரசனான  தசரதன்;  கைகயன்  தனையைதன் கரத்தும் - கேகய
நாட்டு  மன்னனது  மகளான  கைகேயியின் கைகளிலும்;  அம்முறைச்
செய்கையின்  -  முன்  சொன்ன  முறையான  செய்கையால்; தேவர்
ஆர்த்து  எழ  அளித்தனன்  - தேவர்கள் ஆரவாரித்து எழ அந்த
அமுதப் பகுதியைக் கொடுத்தான்.

கைகயன்:     கேகய  நாட்டரசன்.  தனையை: மகள். ‘‘அம்முறைச்
செய்கையின்’’   என்பதற்கு   முறையினும்    செய்கையினும்’’  என்று
பொருள்    கூறுவர்.   முறையாவது   முனிவர்   கூறிய   ‘‘தருமரபு’’
செய்கையாவது  கோசலைக்குத் தந்த அம்முறைச்  செய்கையாக  என்று
கூறுதல்  சிறப்பு.  ஓதிமம்:  அன்னம்.  வைகுறு: ‘உறு’  துணை வினை.
தசரதன் ஆண்ட நாடு ‘‘கோசலம்’’  என்னுமம் பெயர்கொண்டது என்று
குறிப்பிடுகிறார்.

கோசலைக்கு  ஈந்த  முறையிலேயே   கைகேயிக்கும்  கொடுத்தான்
என்பது கருத்து.                                           89