திரு அவதாரப் படலம் - 268
தசரதன் கௌசலைக்கு ஒருபங்கு கொடுத்தல்
267.
மா முனி அருள் வழி. மன்னர்மன்னவன்.
தூம மென் சுரி குழல் தொண்டைத் தூய வாய்க்
காமரு கோசலை கரத்தில். ஓர் பகிர்.
தாம் உற அளித்தனன். சங்கம் ஆர்த்து எழ.
மாமுனி அருள் வழி - மாமுனிவரான கலைக்கோட்டு முனிவர்
அருள் செய்தபடியே; மன்னர் மன்னவன் - அரசர்க்கு அரசனான
தயரதன்; தூமமென் சுரிகுழல் தொண்டைத் தூயவாய்க்
காமருகோசலை -அகிற் புகையூட்டப்பட்ட கடை சுருண்ட கூந்தலையும்
தொண்டைக் கனி போன்ற சிவந்ததான வாயையும் உடைய அழகிய
கோசலையினது; கரகத்தின் ஓர் பகிர்- கைகளிலே அந்த அமுதத்தின்
ஒரு பகுதியை; சங்கம் ஆர்த்தெழ தாமுற அளித்தனன் - சங்குகள்
ஒலிக்கக் கொடுத்தான்; அருள்வழி - அருளின் வழியே (அருள்
செய்தபடியே).
தொண்டை: கொவ்வைப் பழம். வாய்: அதரம். காமர்: அழகு காமரு
என உகரச் சாரியை பெற்றது. கரம்: கை பகிர்: பகுதி தாமுற என்பதில்
தாம் அசை. உறு: பொருந்த. பகிர்: சரி பாதியுமாம். சுரிகுழல்:
வினைத்தொகை. ‘‘மன்னவன் - சங்கம் ஆர்த்தெழ - கோசலை
கரத்தில் ஓர் பகிர் அளித்தனன்’’ என்பது கருத்து. 88
