திரு அவதாரப் படலம் - 262

bookmark

கலைக்கோட்டு முனி மாமகம் தொடங்கச் செல்லுதல்

262.

என்றலும். ‘அரச! நீ இரங்கல்; இவ் உலகு
ஒன்றுமோ? உலகம் ஈர்-ஏழும் ஒம்பிடும்
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக. ஈண்டு!’ என்றான்.
 
என்றலும்   - என்று (தயரத வேந்தன் தனது குறையைக்)  கூறவே;
அரசே!  நீ  இரங்கல் -  (அதைக்  கேட்ட  முனிவன்)  அரசே!  நீ
வருந்தாதே;  இவ்வுலகு  ஒன்றுமோ உலகம் ஈரேழும் ஒம்பிடும் -
இவ்வுலகம்  ஒன்று மட்டுமோ பதினான்கு உலகங்களையும்  பாதுகாத்து
அரசாள  வல்ல;  வன்திறல்  மைந்தரை  அளிக்கும்-மிகுந்த திறமை
வாய்ந்த  மைந்தர்களைக்  கொடுத்தருளக்  கூடிய; மா மகம் -  பெரிய
தொரு   வேள்வியினை;   இன்று   நீ  இயற்றுதற்கு  - இன்றே  நீ
செய்வதற்காக;  ஈண்டு  எழுக  என்றனன் - இப்போதே எழுவாயாக
என்றான்.

இரங்கல்:     ‘அல்’ எதிர்மறை  விகுதி. ஒன்றுமோ ‘ஓ’ எதிர்மறை
உணர்த்தும்.  வன்திறல்:  ஒரு  பொருட்  பன்மொழி. மைந்து: வலிமை.
மகம்: வேள்வி மா என்னும் குறிப்பு.  மக்கட்பேறளிக்கும் வேள்வியைக்
குறித்தது.  இன்று  இயற்றுதற்கு  நீ   எழுக:  விரைவும்  ‘அவசியமும்’
காட்டிற்று.   ஓம்புதல்:  காத்தல்.   எழுக:  வியங்கோள்  வினைமுற்று
(கட்டளைப் பொருளில் வந்தது). ஈண்டு: இப்போதே.

தனக்குப்  பிறகு நாடாளவல்ல மைந்தர் இல்லையே என்று வருந்திய
தயரதனுக்கு    இவ்வுலகம்   மட்டுமோ.   ஈரேழு    உலகங்களையும்
ஆளவல்ல புதல்வர்களைப் பெறப் போகிறாய் எனக்   கூறிய மொழிகள்
இராமாவதாரத்தைப்  பற்றி  வசிட்டன்  அறிந்திருந்தது  போல. கலைக்
கோட்டு முனிவனும் அறிந்திருந்தான் என்பதைக் காட்டும்.         82