திரு அவதாரப் படலம் - 254

bookmark

தசரதனும் முனியும் அயோத்தி அடைதல்

254.

அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்
முடியுடை வேந்தன். அம் முனிவனோடும். ஓர்
கடிகையின் அடைந்தனன். - கமல வாள் முக
வடிவுடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே.
 
கமலவாள் முகவடிவுடை மடந்தையர்-தாமரை மலர் போன்ற ஒளி
பொருந்திய  முகமும். அழகும். இளமையும் வாய்ந்த   சுமங்கலிகளாகிய
பெண்கள்;  வாழ்த்து  எடுப்ப  - வரும் வழி யெல்லாம் வாழ்த்தொலி
கூற;  முடி  உடை  வேந்தன்  -  மணி  முடி  தரித்த மன்னனாகிய
தயரதன்:     அம்முனிவனோடும்   -    அந்தக்     கலைக்கோட்டு
மாமுனியோடும்;   ஓர்   கடிகையில்  -  ஒரு  நாழிகைப் போதிலே;
அடிகுரல்   முரசு   அதிர்   -   குணில்   கொண்டு  அடிப்பதால்
ஒலிமிக்குடைய   முரசங்கள்  முழங்கும்;  அயோத்தி  அடைந்தனன்
-அயோத்தி மாநகரை அடைந்தான்.

அடிகுரல்:     அடிக்கப்படுகின்ற  குரல்;  வினைத்தொகை. கடிகை:
நாழிகை என்பது  பொருள்.  இதற்கு   நல்ல   நேரத்திலே   என்றும்
கூறலாம். முனிவரது     நல்ல    வருகையைக்        காட்ட  முரசு 
முழங்கப்பட்டதென்க.    கமலவாண்முக     வடிவுடை    மடந்தையர்
என்பதில்  கமலம்   கருணையையும்   வடிவு:  அழகையும்.   மடந்தை
என்பதால்   இளமையையும்     உடையவர்கள்   அப்பெண்கள்  என
அறியலாம்.    பெரியோர்களுக்கு     வாழ்த்துக்   கூறி  வரவேற்பவர்
சுமங்கலிகளே    என்பதால்    இவ்வாறு   பொருள்    கூறப்பட்டது.
வாழ்த்து: பல்லாண்டிசை.

மடந்தையர்    வாழ்த்தெடுப்ப - வேந்தன் - முனிவனோடும் - ஓர்
கடிகையில் முரசு அதிர் அயோத்தி அடைந்தனன் என்க. எடுப்பவே -
‘ஏ‘ அசை                                                75