திரு அவதாரப் படலம் - 253
கலைக்கோட்டு முனியை அழைத்துப் போதல்
253.
அயல் வரும் முனிவரும்
ஆசி கூறிட.
புயல் பொழி தடக் கையால் தொழுது.
பொங்கு நீர்க்
கயல் பொரு விழியொடும்
கலை வலாளனை.
இயல்பொடு கொணர்ந்தனன்.
இரதம் ஏற்றியே.
அயல்வரு முனிவரும் ஆசி கூறிட- (அந்த முனிவனைத்
தொடர்ந்து) அயலே வரும் பிற முனிவர்களும் ஆசி கூற; புயல்
பொழி தடக்கையால் தொழுது - தயரதன் புயல் போலப் பொழியும்
தனது கைகளால் முனிவர்களைத் தொழுது; பொங்கு நீர் கயல்பொரு
விழியொடு - பொங்கும் நீரிலே வாழும் கயல்மீன் போன் கண்ளை
உடைய அவர் மனைவியான சாந்தையோடும்; கலைவலாளனை -
கலைகளில் தேர்ச்சி பெற்ற கலைக் கோட்டு முனிவனை; இரதம்
ஏற்றியே - (தான் கொண்டு சென்ற) தேரில் ஏறச் செய்து; இயல்பொடு
கொணர்ந்தனன் - உரிய மரியாதைகளுடன் நகருக்கு அழைத்து
வந்தான்.
‘‘புயல் பொழி தடக்கை’’ வரையாது வழங்கும் மேகத்தைப் போல
பயனை எதிர்பாராது வாரி வழங்கும் கைகளை உடையவன் தயரதன்
என்பது கருதி. ‘‘தருகை நீண்ட தயரதன்’’ என்றார் முன்னும். நீர்க்
கயல்பொரு விழி: அன்மொழித் தொகை. விழியை உடையவர் என்பது
பொருளாகும். பார்வையால் குஞ்சுகளைக் காக்கும் மீன்போல. கருணை
நோக்கத்தால் உலகத்து மாந்தரைக் காக்க வல்லவள் என்பது குறிப்பு.
ஆணுக்குக் கலையறிவும். பெண்ணுக்குக் கருணையும் அணிகலன்கள்
என்பது தோன்ற முனிவனை ‘‘கலைவலாளன்’’ என்றார். அவன்
தேவியைக் கருணைக் கண்ணினள்’’ என்றாரென்க.
ஆசி கூறிட - தொழுது - கலைவலாளனை - விழியொடு
இரதமேற்றி - கொணர்ந்தனள் என்பது பொருள் முடிவாம். 74
