திரு அவதாரப் படலம் - 251

bookmark

251.

அண்டர்கள் துயரமும். அரக்கர் ஆற்றலும்.
விண்டிடப் பொலிதரும் வினை வலாளனை.
குண்டிகை. குடையொடும். குலவு நூல் முறைத்
தண்டொடு. பொலிதரு தடக் கையான்தனை. *
 
அண்டர்கள்    துயரமும்-  தேவர்களது (இதுவரை நீக்கப்படாத)
துயரமும்;  அரக்கர்  ஆற்றலும் - அரக்கர்களது (இதுவரை எவராலும்
வெல்லப்படாத) வலிமையும்; விண்டிடப் பொலிதரு வினைவலானனை
- விட்டு நீங்குவதற்குக் காரணமாக விளங்கும் செயல்திறம்  வல்லவனை;
குண்டிகை  குடையொடும்  குலவு  நூல்  முறைத்   தண்டொடும்
பொலிதரு  - கமண்டலம்  குடைகளுடன் பொருந்திய நூல் முறைப்படி
அமைந்த  யோகதண்டத்துடனும்  விளங்கிய; தடக்கையான் தனை  -
தடக்கைகளையும் உடையவனை.

முன்பாட்டில்     கூறிய  சுற்றிய  சீரைககுத்தக.  குண்டிகை: குடை
பொருந்திய  கைகளையும்.   நூல்  முறைத்   தண்டொடும்  பொலிதரு
தடக்கையினையும்      உடையவனாகத்    திகழ்ந்தான்    என்கிறார்.
‘‘அண்டர்கள் துயரமும்.  அரக்கர் ஆற்றலும் ஏக காலத்தில் விண்டிடப்
பொலி  தருவினை’’  யாதெனின்  ராமாவதாரத்துக்குக் காரணமாகவுள்ள
வேள்வியை நிறைவேற்றுதலாகிய தொழில் என்க.

குண்டிகை:     கமண்டலம். குடை: உட்குடை வுள்ளதால் இப்பெயர்
பெற்றது தண்டு: யோக தண்டத்தைக்  குறிக்கும்  (திரிதண்டம்) தடக்கை
நீண்ட கை நூல்: சமய நூல்கள்.

பிறங்குவான்தனை.      மூர்த்தியான்  தனை.  வினைவல்லாளனை.
தடக்கையான்  தனை:  ‘கண்களால்   எதிர்ந்தனன்’  என்பது கொண்டு
பொருள் முடிவுபெற்றதாயிற்று                                72