திரு அவதாரப் படலம் - 246
தேவர்களின் மகிழ்ச்சி
246.
அந்தர துந்துபி முழக்கி. ஆய் மலர்
சிந்தினர். களித்தனர் - அறமும் தேவரும்-
‘வெந்து எழு கொடு வினை வீட்டும் மெய்ம்முதல்
வந்து எழ அருள் தருவான்’ என்று எண்ணியே.
அறமும் தேவரும் - அறக்கடவுளும் தேவர்களும்; வெந்து எழு
கொடு வினை வீட்டும் - வெந்து எழுந்து நம்மை வருத்தும் கொடிய
துன்பங்களை அழிக்கும்; மெய்ம் முதல் வந்து எழ - மெய். முதற்
பொருளாகிய பரமன் இங்கு வந்து தோன்ற; அருள் தருவான் என்று
எண்ணி - இம் முனிவன் அருள் புரிவான் என நினைத்து; அந்தர
துந்துபி முழக்கி - தேவ வாத்தியங்களை முழக்கிக் கொண்டு;
ஆய்மலர் சிந்தினர் - ஆய்ந்தெடுத்த நறுமண மலர்களைத்
தூவினராக; களித்தனர் - மகிழ்ச்சி மிகக் கொண்டனர்.
அந்தரம்: விண்ணுலகம். துந்துபி: தேவ வாத்தியம். முழக்கி:
வினையெச்சம். ஆய்மலர்: வினைத் தொகை. சிந்துதல்: சொரிதல்.
களித்தல். களி கொண்டாடுதல். அறம்: அறக்கடவுளைக் குறித்து
நின்றது. வெந்தெழுதல்: வெப்பம் கொண்டு ஓங்குதல். கொடுவினை:
பண்புத் தொகை. கொடுவினைகளை அழிக்கும் மெய்ம் முதல் என்பது.
பொருள்.
மெய்: உண்மை. முதல்: காரணம். உலகுக்கு முதற் காரணமான
மெய்ப் பொருளாகிய பரமனைக் குறித்தது. இங்கு ராமபிரானாக
அவதரிக்க இருக்கும் திருமாலை ‘மெய்ம்முதல்’ என்றார்.
வந்தெழ: வந்து அவதரிக்க. அறமும் தேவரும் மெய்ம்முதல்
வந்தெழ - அருள் தருவான் என்றெண்ணி - முழக்கி - சிந்தி -
களித்தனர் என்பது கருத்து முனிவன் தேரேறி வருதல் கண்டு
அறமும் தேவரும் மகிழ்ந்தனர் என்பதாம். 67
