திரு அவதாரப் படலம் - 245

bookmark

கலைக்கோட்டு முனி தேரிற் செல்லுதல்

245.

குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிட.
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர.
வனிதையும். அரு மறை வடிவு போன்று ஒளிர்
முனிவனும். பொறிமிசை நெறியை முன்னினார். 
 
குனி சிலை வயவனும்- வளைந்த வில்லையுடைய  வெற்றி  மிகுந்த
வேந்தனான  உரோபத  மன்னனும்;  கரங்கள் கூப்பிட -  கைகளைக்
குவித்து  வணங்கி  நிற்கவும்; துனி அறு முனிவரர் -  குற்றம்  நீங்கிய
மனத்தினரான  முனிவர்கள் பலரும் தொடர்ந்து  சூழ்வர-  தொடர்ந்து
பின்பற்றிவரவும்;  வனிதையும்  அருமறை  வடிவு  போன்று  ஒளிர்
முனிவனும்  - தனது வாழ்க்கைத் துணைவியான  சாந்தையுடன். அரிய
வேதங்களே   உருவெடுத்து   வந்தது  போன்ற  அந்த    முனிவனும்;
பொறிமிசை -இயந்திரத் தேர் மீது அமர்ந்து; நெறியை  முன்னினார்-
அயோத்தியின் வழியே செல்ல எண்ணினார்.

குனி     சிலை - வளைந்த வில். குனிதல்:  வளைதல்  குனி  சிலை
வினைத்  தொகை.  வயவன்:   வெற்றியுடையவன்.  வயவனும்    “உம்
எதிரது  தழீஇயது.  கூப்பிட -  குவிக்க (கூப்பு+இடு+அ)  ‘இடு’  என்பது
துணை  விகுதி.  கூப்பு:  வினை.  துணி:  உலக  இயற்கையால்  நேரும்
துன்பமாம்.    அதனை     வென்றவர்களாதலால்     “துனி    அறு”
முனிவராயினர்.  பொறி:  இயந்திரம்   ( “இயந்திர  எகின    மூர்ந்து”)
என்பது  வில்லிபாரம்.  நினைந்த நெறியில் செல்ல  வல்லது  என்பதால்
 “தேர் ஏறி நெறியை முன்னினார்” என்று கூறப்பட்டது.

கரங்கள்   கூப்பிட. சூழ்வர  வனிதையும்  முனியும் பொறிமிசை  -
நெறியை முன்னினார் என இயைக்கவும்.                         66