திரு அவதாரப் படலம் - 244
கலைக்கோட்டுமுனி அயோத்திக்குப் புறப்படுதல்
244.
‘அவ்வரம் தந்தனம்; இனித்தேர் கொணர்தி’ என
அருந் தவத்தோன் அறைதலோடும்.
வெவ்அரம் தின்று அயில்படைக்கும் சுடர்வேலோன்
அடி இறைஞ்சி. ‘வேந்தர்வேந்தன்
கவ்வைஒழிந்து உயர்ந்தனன்’ என்று. அதிர் குரல்தேர்
கொணர்ந்து. இதனில். கலை வலாள!
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக!’
என. ஏறிச் சிறந்தான் மன்னோ.
அவ்வரம் தந்தனம் இனித் தேர் கொணர்தி என - நீ கேட்ட
அந்த வரத்தைக் கொடுத்தோம். இனி. தேர் கொண்டு வருக என்று;
அருந்தவத்தோன் அறைதலோடும் -அந்தத் தவ முனிவன் கூறிய
உடனே; வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலான் -
வெவ்விய அரத்தால் அராவப்பட்டு. கூரிய ஒளியுடைய வேலை
உடைய உரோம பதன்; அடி இறைஞ்சி - கலைக்கோட்டு முனிவனது
பாதங்களைத் தொழுது; வேந்தர் வேந்தன் கவ்வை ஒழிந்து
உயர்ந்தனன் என்று - மன்னர் மன்னனான தயரதன் துன்பம் நீங்கி
உயர்வான் என்றெண்ணி; அதிர் குரல் தேர் கொணர்ந்து - அதிர்ந்து
ஒலிக்கும் தேரை வரவழைத்து; இதனில் கலைவலாள செவ்வி நுதல்
திருவினோடும் போந்து ஏறுக என- கலைகளில் வல்லோனே! இதோ
இத்தேரில் அழகிய நெற்றியை உடைய திருமகளைப் போன்ற
சாந்தையுடன் ஏறி அருள்க! என்று கூற; ஏறிச் சிறந்தான் - அவ்வாறே
(அம்முனிவன்) ஏறி அமர்ந்தான்.
மன்+ஓ: அசைகள் தந்தனம்: தன்மைப் பன்மை வினைமுற்று.
கொணர்தி: ஏவல் வினைமுற்று “அரம்” இரும்புக்கருவிகளை
அராவிக் கூராக்கும் கருவி. அரம் தின்று அயில் படைக்கும்
அரத்தால் தேயக்கத் தேய்க்க அரம் தேய்ந்து சிறிதாகும் என்பதனை
உணர்த்தும். கவ்வை துன்பம். அதிர்குரல்: வினைத்தொகை. செவ்வி:
அழகு. தேர் ஏறிச் சிறந்தான்: அரிய செயல் ஒன்றைச் செய்து
முடிக்கப்புறப்படுதலால் சிறந்து விளங்கினான் என்பது குறிப்பு.
கவ்வை ஒழிந்து உயர்வான் என்னாது உயர்ந்தனன் என இறந்த
காலத்தால் கூறியது உறுதி என்பது தோன்றவாகும்.
வரம் தந்தனம் - தேர் கொணர்தி என - முனிவன் கூற - சுடர்
வேலான் அடி இறைஞ்சி - வேந்தர் வேந்தன் கவ்வை ஒழிந்து
உயர்ந்தான் என - தேர் கொணர்ந்து - திருவினொடும் ஏறுக என.
ஏறிச் சிறந்தான் என்பது பொருள் முடிபாகும். திரு: திருமகளைப்
போன்ற தனது மகளான சாந்தையை. செவ்வி நுதல் அழகமைந்த
நெற்றியை உடையவள். தனது வளர்ப்பு மகளான சாந்தையுடன்
வேள்வியை நிறைவேற்ற அயோத்தி செல்லவேண்டும் என்பது
கருத்து. 65
