திரு அவதாரப் படலம் - 241
தசரதன் அயோத்தி மீளுதல்
241.
செவ்வி நறுஞ் சாந்து அளித்து. தேர் வேந்தன்-
தனை நோக்கி. ‘இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருள்தி’ என. நிகழ்ந்த பரிசு
அரசர்பிரான் கழறலோடும்.
‘அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந்தவனைக்
கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்; ஆன்ற
செவ்வு முடியோய்!’ எனலும். தேர் ஏறிச்
சேனையொடும் அயோத்தி சேர்ந்தான்.
செவ்வி நறும் சாந்தளித்து- (விருந்து முடிந்தவுடன்) மணம்
மிகுந்த சந்தனம் அளித்த உரோமபதன்;தேர் வேந்தன் தனைநோக்கி
- தயரத மன்னனைப் பார்த்து; நீ இவண் சேர்ந்த கவ்வை
உரைத்தருள்தி என - தாங்கள் இங்கு வந்த காரியத்தைச்
சொல்லியருள வேண்டுமென்றுரைக்க; அரசர் பிரான் நிகழ்ந்த பரிசு
கழறலோடும் - அதற்கு. அரசர்க்கு அரசனாகிய தயரதன் நிகழ்ந்த
செய்தியைச் சொல்ல லோடும்; அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து
அருந்தவனை - பொறாமை முதலிய தீய குணங்களை நீக்கிய
மனத்தை உடையவரான கலைக்கோட்டு முனிவரை; கொணர்ந்து
ஆங்கண் விடுப்பென் -அயோத்திக்கு அழைத்து வந்து உன்னிடம்
சேர்த்து விடுவேன்; ஆன்ற செவ்வி முடியோய் எனலும் - உயர்ந்த
அழகிய மணிமுடி தரித்த வேந்தே! என உரோமபதன் கூறியதும்; தேர்
ஏறி. சேனையொடும் அயோத்தி சேர்ந்தான் -உடனே தயரதன்
தேரேறி. சேனையோடு அயோத்தி சென்று சேர்ந்தான்.
செவ்வி: அழகு. இங்குப் பக்குவம் என்னும் பொருளைத் தந்து
நின்றது. நறுமை: மணம். சாந்து: சந்தனம் முதலிய மணப்பொருட்
கலவை. கவ்வை: காரியம் பரிசு: தன்மை. அவ்வியம்: அழுக்காறு.
அங்கண்: அங்கே முதல் நீண்டு ‘ஆங்கண்’ என நின்றது.
நறுஞ் சாந்து: பண்புத்தொகை. விருந்துண்டு மகிழ்ந்ததும் சந்தனம்.
வெற்றிலை. பாக்கு ஆகியவை தந்து உபசரித்தல் மரபு. நிகழ்ந்த
பரிசாவது. மக்கட்பேறளிக்கும் வேள்வி செய்ய வசிட்டன் கூறியது
முதல் முனிவரை அழைத்துப் போக வந்ததுவரை நிகழ்ந்த
செய்தியைத் தயரதன் உரோமபத மன்னனுக்குக் கூறினன் என்பதே.
சாந்தளித்து - நோக்கி - அருள்தி என. நிகழ்ந்த பரிசு
சுழறலோடும். அருந்தவனை - விடுப்பன் என்றும் தேரேறி அயோத்தி
சேர்ந்தான் என்றும் முடிக்க
உரைத்தருள்க: உரைக்க என்பதாம். ‘அருள்’ மரியாதை குறித்து
வந்த பகுதிப் பொருள் விகுதி. கொணர்ந்து விடுப்பென் எனப்பொருள்
முடிவுபெறும். ‘கொணர்ந்து வினையெச்சம். 62
