திரு அவதாரப் படலம் - 240

bookmark

உரோமபதன் தசரதனுக்கு விருந்தளித்தல்

240.

ஆடகப் பொன் சுடர் இமைக்கும் அணி மாடத்
   திடை. ஓர் மண்டபத்தை அண்மி.
பாடகச் செம் பதும மலர்ப் பாவையர் பல்-
   லாண்டு இசைப்ப. பைம் பொன் பீடத்து.
ஏடு துற்ற வடிவேலோன்தனை இருத்தி.
   கடன்முறைகள் யாவும் நேர்ந்து.
தோடு துற்ற மலர்த் தாரான் விருந்து அளிப்ப.
   இனிது உவந்தான். சுரர் நாடு ஈந்தான்.
 
ஆடகப் பொன்  சுடர்  இமைக்கும்  அணிமாடத்து  இடை  -
பொன்னொளி  விளங்கும் அழகிய மாளிகை ஒன்றிலே  அமைந்த;  ஒரு
மண்டபத்தை  அண்மி  -  ஒரு  மண்டபத்தை   அடைந்து; பாடகச்
செம்பதும மலர்ப் பவையர் பல்லாண்டு இசைப்ப- பாடகம் அணிந்த
அழகிய  பாதங்களை உடைய மகளிர் பலர் பல்லாண்டு  பாட; ஏடுதுற்ற
வடிவேலோன்  தனை பைம்பொன் பீடத்து  இருத்தி -  மலர்களால்
அலங்கரிக்கப்பட்ட   கூரிய   வேலை   உடைய  தயரதனைப்   பசிய
பொன்மயமான  ஆசனத்திலே  இருக்கச்  செய்து;  கடன்   முறைகள்
யாவும் நேர்ந்து - பேரரசனுக்குச் செய்ய வேண்டிய  கடமைகள் யாவும்
செய்து;  தோடு  துற்ற  மலர்த்தாரான் விருந்து அளிப்ப  -  இதழ்
நெருங்கிய   மாலையணிந்த   மன்னனாகிய   உரோமபதன்   விருந்து
கொடுக்க; சுரர்நாடு ஈந்தான் இனிது  உவந்தான் - அமரர்  நாட்டை
மீட்டுக் கொடுத்தவனான தயரத மன்னன் இனிதே மகிழ்ந்தான்.

ஆடகம்:   ஒரு வகைப் பொன். ஆடகப்பொன்: இரு  பெயரொட்டுப்
பண்புத்  தொகை.  இமைத்தல்:  ஒளிர்தல்.  அண்மி: சேர்ந்து.  பாடகம்:
காலில்அணியும் அணிகலன் பதுமமலர்: உவமையாகு பெயர். ‘செம்பதும
மலர்ப்பாயைர்’  செந்தாமரையில்  அமர்ந்திருக்கும்   திருமகளை  ஒத்த
மகளிர்  என்பதும்  தகும்.  பாவை:  பதுமை.  உவமை யாகு  பெயராய்
மகளிரை  உணர்த்தி நின்றது. ஏடு: இதழ்.  சினையாகு  பெயராய் இங்கு
மலர்  மாலையை உணர்த்தியது. உகந்தான்:  விரும்பினான்.  நாடு: நாடி
வரத்தகுந்தது  என்பதால்  இப்பெயர் பெற்றதென்பர்.  பீடம்:  ஆசனம்.
துற்ற: நெருங்கிய.

அணிமாடத்     திடை - மண்டபத்தை  அண்மி -  பொன் பீடத்து
இருத்தி - கடன் யாவும் நேர்ந்து -  விருந்தளிப்ப -  இனிது உவந்தான்
என முடிக்க.

தயரதச்     சக்கரவர்த்தியை  உரோமபத   மன்னன் அரியணையில்
இருக்கச்   செய்து.   பேரரசனுக்குச்  செய்யவேண்டிய    மரியாதைகள்
யாவும்   செய்து   விருந்தளித்தான்.  தயரதன்   அதற்குப்    பெரிதும்
உவந்தான்.                                                 61