திரு அவதாரப் படலம் - 238
உரோமபதன் வணங்கத் தசரதன் தழுவுதல்
238.
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன்-
தனைக் கண்ணுற்று. எழிலி நாண
அதிர்கின்ற பொலந் தேர்நின்று அரசர்பிரான்
இழிந்துழி. சென்று அடியில் வீழ.
முதிர்கின்ற பெருங்காதல் தழைத்து ஓங்க.
எடுத்து இறுக முயங்கலோடும்.
கதிர் கொண்ட சுடர் வேலான்தனை நோக்கி.
இவை உரைத்தான் - களிப்பின் மிக்கான்;
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை- தன்னை எதிர்
கொண்டு அழைத்துச் செல்ல வருகின்ற வெற்றி பொருந்திய
உரோமபத மன்னவனை; கண்ணுற்று எழிலிநாண அதிர்கின்ற
பொலம் தேர் நின்று இழிந்துழி - பார்த்து. மேகமும் நாணும்படியாக
முழங்குகின்ற தனது பொன்தேரிலிருந்து தயரதன் கீழே இறங்கும்
போது; சென்று அடியின் வீழ - உரோமபத மன்னன் சென்று
தயரதன் பாதத்தில் வீழ்ந்து வணங்க; முதிர்கின்ற பெருங்காதல்
தழைத்து ஓங்க - மேன்மேலும் முதிர்கின்ற பேரன்பு பெருகி. ஓங்க;
எடுத்து. இறுக முயங்கலோடும் - உரோமபத மன்னனைத் (தன்
கைகளால்) வாரி எடுத்துத் தழுவியவுடன்;கதிர்கொண்ட சுடர் வேலான்
தனை நோக்கி - கதிர்விட்டு ஒளிரும் வேலையுடைய தயரதனைப்
பார்த்து; களிப்பின் மிக்கான் இவை உரைத்தான் - மகிழ்ச்சி மிகக்
கொண்ட உரோமபதன் பின்வருமாறு கூறலானான்.
எதிர்கொள்வான்: வானீற்று வினையெச்சம். ‘எதிர் கொள்ள’ என்ற
பொருளில் வந்தது. வயம்: வெற்றி. கண்ணுற்று: மிகுந்த ஆதரவுடன்
பார்த்து. எழிலி: மேகம். கதிர்: ஒளிக்கற்றை (கிரணம்) பொலம்: பொன்
(அழகு என்பதும் பொருளாம்) உழி: போது எதிர்கொள்வான்
வருகின்ற வேந்தனைக் கண்ணுற்று. அரசர்பிரான் தேர்நின்று
இழிந்துழி. அடியில் வீழ. எடுத்து முயங்க. சுடர்வேலான் தனை
நோக்கி - இவை உரைத்தான் என்பது பொருள் முடிவு. இவை:
பின்வரும் புகழுரைக் அடுத்த பாடலில் காணலாம். வேல்: வெல்லு
தலையுடையது (ஒரு கைப்படையாம்). ஆதலால் முதன்நிலை திரிந்த
தொழிற் பெயராகும். 59
