திரு அவதாரப் படலம் - 237
தசரதனை வரவேற்க உரோமபதன் வருதல்
237.
கொழுந்து ஓடிப் படர் கீர்த்திக் கோவேந்தன்
அடைந்தமை சென்று ஒற்றர் கூற.
கழுந்து ஓடும் வரி சிலைக் கைக் கடல் - தானை
புடை சூழ. கழற் கால் வேந்தன்.
செழுந் தோடும் பல் கலனும் வெயில் வீச.
மாகதர்கள் திரண்டு வாழ்த்த.
எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன்
அரசை எதிர்கோள் எண்ணி.
கொழுந்து ஓடி படர் கீர்த்திக்கோ வேந்தன்- கொழுந்து விட்டு
ஓடிப் படர்கின்ற கீ்ர்த்தியை உடைய மன்னர் மன்னான தயரதன்;
அடைந்தமை சென்று ஒற்றர் கூற - தம் நகரை அடைந்த செய்தியை
ஒற்றர்கள் உரோமபத மன்னனிடம் சென்று கூற; கழற் கால் வேந்தன்
-வீரக் கழலணிந்த கால்களை உடைய அவ்வரசன்; கழுந்து ஓடும் வரி
சிலைக்கை கடல் தானைபுடை சூழ - தேய்ந்து மழுங்கித் திரண்ட
வரியமைந்த வில்லைக் கையிலுடைய கடல் போன்ற வீரர்கள் கொண்ட
படை புடை சூழ; செழுமம் தோடும் பல்கலனும் வில் வீச - செழுமை
மிக்க காதணிகளும் பிற அணிகலன்களும் ஒளிரவும்; மாகதர்கள்
திரண்டு வாழ்த்த - மாகதர்கள் திரண்டு வாழ்த்தவும்; எழுந்து ஓடும்
உவகையுடன் - மேலெழுந்து பொங்கும் மகிழ்வொடு; அரசை
எதிர்கோள் எண்ணி -தயரத மன்னனை எதிர்கொண்டு அழைத்து வர
நினைத்து; ஓசனை சென்றனன் - தனது நகரிலிருந்து ஒரு யோசனை
துரம் சென்றான்; கொழுந்து -தளிர்; கீர்த்தி - புகழ் “கொழுந்
தோடிப் படரும்” கொடிபோல் எங்கும் புகழ் பரப்பி வாழ்பவன்
தயரதன்’’ என்கிறார்.
கோவேந்தன்: அரசர்களுக்கு அரசன். ஒற்றர்: உளவாளிகள்.
கழுந்து: தேய்ந்து திரண்ட வடிவம். அடிக்கடி கையாள்வதால் தேய்ந்து
மழுங்கித் திரண்டிருக்கும் ‘வரிவில்’ என்றார். வரிவில்: கட்டமைந்த
வில் உவமைத் தொகை. தோடு: காதணி. உவகை: உவத்தல்
தொழிற்பெயர். எதிர்கோள்: எதிர்கொள்ளுதல். கோள்: முதல்நிலை
திரிந்த தொழிற்பெயர்.
வேந்தன். கோவேந்தனை எதிர்கோள் எண்ணி. எழுந்தோடும்
உவகையுடன் சென்றான் என்று முடிக்க. 58
