திரு அவதாரப் படலம் - 236

bookmark

தசரதன் உரோமபதனை அடைதல்

236.

காகளமும் பல் இயமும் கனை கடலின்
   மேல் முழங்க. கானம் பாட.
மாகதர்கள். அரு மறை நுல் வேதியர்கள்.
   வாழ்த்து எடுப்ப. மதுரச் செவ் வாய்த்
தோகையர் பல்லாண்டு இசைப்ப. கடல் - தானை
   புடை சூழ. சுடரோன் என்ன
ஏகி. அரு நெறி நீங்கி. உரோமபதன்
   திருநாட்டை எதிர்ந்தான் அன்றே.
 
காகளமும்  பல்  இயமும்   கனை  கடலின்  மேல்  முழங்க-
எக்காளமும்.  வேறுபல   வாத்தியங்களும்  ஒலிக்கின்ற  கடலை  விடப்
போரொலி செய்து முழங்கவும்;  மாகதர்கள் கானம் பாட - பாடகர்கள்
இன்னிசை பாடவும்; அருமறை நுல் வேதியர்கள்  வாழ்த்து எடுப்ப -
அரிய   மறைவல்ல   அந்தணர்கள்   வேத    மந்திரங்களைக்   கூறி
வாழ்த்திசைக்கவும்;   மதுரச்   செவ்வாய்த்  தோகையர் பல்லாண்டு
இசைப்ப  - இன்மொழி கூறும் வாயினரான மயில்  போன்ற  மங்கையர்
பல்லாண்டு  பாடவும்;  கடல்  தானைபுடை  சூழ  -  கடல்  போன்ற
படைகள்  தன்னைச்  சூழ்ந்து  வரவும்;  சுடரோன்  என்ன  ஏகி  -
சூரியனைப்   போல   விரைந்து    சென்று;   அரு  நெறி  நீங்கி -
அரியநெறிகளையெல்லாம் கடந்து சென்று;  உரோமபதன் திருநாட்டை
எதிர்ந்தான் - உரோமபத மன்னனது அழகிய நாட்டை அடைந்தான்.

அன்றே:   அசை. காகளம்: எக்காளம்  என்னும் ஒருவகைக் கொம்பு.
கனை கடல்: வினைத்தொகை. கானம்: இன்னிசை. மாகதர்:   பாடகர்கள்.
அரசனுக்கு  மெய்க்கீர்த்தி பாடுதல மாகதர்  தொழில். மதுரம்:  இனிமை
குணவாகு  பெயராய்க்  குரலைக்  குறித்து  நின்றது.   தோகை:  மயில்
தோகையர்:   பெண்கள்   உவமையாகு   பெயர்.    பல்லாண்டு:  பல
ஆண்டுகள்  வாழ்க  எனக்  குறிக்கும் வாழ்த்துப்பாடல்.   கடல்தானை:
உவமைத்   தொகை.   உரோமபதன்   ஆண்ட  நாடு   ‘அங்க  நாடு’
எனப்படும்’. எதிர்தல்: அடைதல்.

பலவகை  வாத்தியங்கள் முழங்க - மாகதர் பாட.  வேதியர் வாழ்த்த.
தோகையர்  பல்லாண்டிசைப்ப  -  தானை புடை சூழ -  நெறி நீங்கி -
திருநாட்டை அடைந்தான்.                                    57