திரு அவதாரப் படலம் - 235
கலைக்கோட்டு முனியை அழைத்துவரத்
தசரதன் புறப்பாடு
235.
என்றலுமே. முனிவரன்தன் அடி இறைஞ்சி.
‘ஈண்டு ஏகிக் கொணர்வென்’ என்னா.
துன்று கழல் முடிவேந்தர் அடி போற்ற
சுமந்திரனே முதல்வர் ஆய
வன் திறல் சேர் அமைச்சர் தொழ. மா மணித் தேர்
ஏறுதலும். வானோர் வாழ்த்தி.
‘இன்று எமது வினை முடிந்தது’ எனச் சொரிந்தார்
மலர் மாரி. இடைவிடாமல்.
என்றலுமே முனிவரன் தன் அடி இறைஞ்சி- என்று வசிட்டன்
கூறியதும் தயரதன் வசிட்டனது திருவடிகளைத் தொழுது; ஈண்டு ஏகிக்
கொணர்வென் என்னா - இப்போதே சென்று அந்த முனிவரை
அழைத்து வருவேன்’’ என்று கூறி; துன்று கழல் முடிவேந்தர் அடி
போற்ற - வீரக்கழலும். மணி முடியும் அணிந்த அரசர் பலரும்
அடிகளில் வீழ்ந்து வணங்கிப் போற்றவும்; சுமந்திரனே முதல்வர் ஆய
- சுமந்திரன் முதலான வலிமை மிக்க; வன்திறல் சேர் அமைச்சர்
தொழ - அமைச்சர்களெல்லாம் வணங்கி வாழ்த்தவும்; மாமணித்தேர்
ஏறுதலும் - அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தயரதன்
ஏறுதலுமே; வானோர் வாழ்த்தி - தேவர்களெல்லோரும் அரசனை
வாழ்த்தி; இன்று எமது வினை முடிந்தது என - இன்றுடன் எங்கள்
தீவிைனை யாவும் தீர்ந்து என்று; மலர்மாரி இடைவிடாமல்
சொரிந்தார் - (மன்னனைப் போற்றி) இடைவிடாமல் தொடர்ந்து பூ
மழை பொழிந்தனர்.
துன்று கழல்: நெருங்கிய கழல்கள் (வினைத் தொகை). கழல்
தானியாகு பெயராய் காலைக் குறித்தது. ‘முடிவேந்தர்’ என்றமையால்
தயரதன் திருவடிகளில் முடிபட வணங்கினர் என்பதைக் குறித்தது.
சுமந்திரன்: தயரதனுடைய அமைச்சர்கள் எண்மரில் ஒருவன்
தேரோட்டுபவனும் ஆவான். வன்றிறல்: மிக்க வன்மை (ஒரு
பொருட் பன்மொழி). இராமனது அவதாரத்தை எதிர்பார்த்திருக்கும்
தேவர்கள். அதனை நிறைவேற்றுவதற்குரிய வேள்வியைச் செய்ய.
கலைக்கோட்டு முனிவரை அழைத்து வருதல் அவசியம் ஆதலால்
‘எமது வினை முடிந்தது’ என மகிழ்ந்தனர். தயரதன் தேரேறி.
முனிவரை அழைத்து வரப் புறப்பட்டான். தேவர்கள் வாழ்த்தி மலர்மாரி பொழிந்து மகிழ்ந்தனர்என்றார். 56
