திரு அவதாரப் படலம் - 232

bookmark

232.

அடைந்தனன். வள நகர் அலங்கரித்து எதிர்
மிடைந்திட. முனியொடும் வேந்தன்; கோயில் புக்கு.
ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி. ஓர்
மடங்கல் - ஆதனத்திடை முனியை வைத்தனன்
 
வளநகர்  அலங்கரித்து எதிர் மிடைந்திட -  வளம்  பொருந்திய
அந்நகரை  (மன்னன் கட்டளைப்படி)    அலங்கரித்து  (அந்த  நகரத்து
மக்கள்) எதிர்கொண்டழைத்துச்  செல்வதற்குக்   கூட்டமாய்   நெருங்கி
வர;     வேந்தன்   முனியொடு  -   அவ்வரசன்   கலைக்கோட்டு
முனிவனுடன்;  அடைந்தனன்  கோயில்புக்கு  -  அந்நகருள் சென்று
அரண்மனைக்குள் போய்; ஒடுங்கல் இல் பொன்  குழாத்து உறையுள்
எய்தி - குறைவுபடாத பொன் திணித்துப் புனைந்த  ஒரு  மண்டபத்தை
அடைந்து;  ஓர்  மடங்கல்  ஆதனத்து இடை- ஒரு  சிங்காதனத்தின்
மேலே; முனியை வைத்தனன் - அந்த முனிவனை  அமரச் செய்தான்.

மிடைந்திட:     நெருங்க.  கோயில்:  கோ+ இல்    அரசமாளிகை.
பொன்குழாம்:  பொன்  மிகுதி.  உறையுள்:   இருப்பிடம்   (மண்டபம்).
மடங்கல்:   சிங்கம்.   ஆதனம்:   ஆசனம்.   முனிவன்    இருந்தான்
என்னாமல்  அரசன்  அமரச்  செய்தான்  என்று  கூறியது.   அரசனது
உபசரிப்பைக்   கண்ட   முனிவன்    பிரமித்துச்   செயலாற்றிருந்தான்
என்பதை  உணர்த்தும்.  மாமுனிவனை  நகரை   அலங்கரித்து  மக்கள்
அழைத்துச்    செல்ல    மண்டபம்     அடைந்து     அரியணையில்
இருத்தினான்                                              53