திரு அவதாரப் படலம் - 229

bookmark

229.

அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை.
வர முனி.  “வஞ்சம்” என்று உணர்ந்த மாலைவாய்.
வெருவினர் விண்ணவர்; வேந்தன் வேண்டலால்.
கரை எறியாது அலை கடலும் போன்றனன்.
 
அரசனும்  முனிவரும் - உரோமபத  மன்னனும் அவனைச் சூழ்ந்து
வந்த  முனிவர்களும்;  அடைந்த  ஆயிடை -  தன்னை வந்தடைந்த
காலத்தில்;  வரமுனி - சிறந்த முனிவனாகிய கலைக்கோட்டு  முனிவன்;
வஞ்சம்  என்று உணர்ந்த மாலைவாய் - தன்னை இங்கு  அழைத்து
வந்து  ‘வஞ்சகச்  செயல்’  என்று  தெளிந்த போதிலே;   விண்ணவர்
வெருவினர் -தேவர்கள் அஞ்சி நடுங்கினர்; வேந்தன்  வேண்டலால்-
அரசன்  வேண்டிக்  கொண்டதால்;  கரை  எறியாது அலை  கடலும்
போன்றனன்  -  கரையை  மோதி அழித்துவிடாது  அலைக்கும் கடல்
போல அந்த முனிவன் கட்டுப்பட்டிருந்தான்.

ஆயிடை:  அப்போது. ‘வரமுனி’ வரம் + முனி (வரம்  தருமுனிவன்).
உணர்ந்த:  தெளிந்த  (ஆய்ந்து தெளிந்த). மாலைவாய்;  வாய்  ‘ஏழாம்’
வேற்றுமை உருபு  “விண்ணவர் வெருவினர்” என்ன நேருமோ   என்று
தேவர்கள் அஞ்சினர். கரை கடவாத கடல் போல. முனிவன்   வஞ்சகம்
என   உணர்ந்தும்   நிலை   கடவாது  பொறுமையுடன்    இருந்தான்.
அலைகடல்: வினைத்தொகை.                                 50