திரு அவதாரப் படலம் - 225

bookmark

225.

‘பெரும் புனல். நதிகளும் குளனும். பெட்பு உற.
கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட.
இரும் புயல் ககனமீது இடைவிடாது எழுந்து
அரும் புனல் சொரிந்தபோது. அரசு உணர்ந்தனர்
 
பெரும்புனல் -  பெய்த  மழையால்  பெருகிய    வெள்ள  நீரால்:
நதிகளும் குளனும் பெட்பு உற -நீரோடும்  ஆறுகளும். நீர்  நிறைந்த
குளங்களும்  மக்கள்  விரும்புமாறும்; கரும்பொடு செந்நெலும்  கவின்
கொண்டு  ஓங்கிட  -  கரும்பும்.  செந்நெற் பயிரும் அழகு  கொண்டு
செழித்தோங்கவும்;  இரும்புயல் ககனமீது எழுந்து - பெரு  மேகங்கள்
வானவீதியில்  எழுந்து நின்று; அரும்புனல்  இடைவிடாது  சொரிந்த
போது   -  அரிய  மழைப்  பெருக்கினை   இடைவிடாமல்  சொரிந்த
வேளையில்;   அரசு  உணர்ந்தனன்  - அந்த   நாட்டு  மன்னனான
உரோமபதன் முனிவரது வருகையைத் தெரிந்து கொண்டான்.

குளம்:     செயற்கை நீர்நிலை. ஓடும் நீருக்கும்  தேங்கும் நீருக்கும்
மழையே  காரணம் என்பதால். ‘நதிகளும் குளனும்  பெட்புற’  என்றார்.
பெட்பு:   விருப்பம்.   கரும்பும்   நெல்லும்   உயர்    பயிர்களாதலின்
சிறப்பித்துக்  கூறினார்.  இனம் கொளற் குரித்தாதலால்  ஏனைய  பயிர்
வகைகளையும்  கூறலாம்.  ககனம்:  வானம்.  புயல்:   மேகம்    கவின்
கொண்டோங்கிட:   அழகு   பெற்றுத்  திகழ.   “மழைவர    மகிழ்ந்து
தழைதரு   பயிர்”  என்றது  ஒப்பு  நோக்கத்    தக்கது.  அரும்புனல்:
நெடுங்காலம்   மழையின்மையால்   அந்நாட்டில்   நீர்    அரிதாயிற்று
என்பதைக் குறித்தது எனலாம்.

மழை   பொழிய-  அதனால்  மன்னன்  முனிவனது   வருகையைத்
தெரிந்து கொண்டான் என்பது கருத்து.                         46