திரு அவதாரப் படலம் - 222
222.
‘இன்ன பல் பகல் இறந்தபின். திரு
நல் நுதல் மடந்தையர். நவை இல் மாதவன்-
தன்னை. “எம் இடத்தினும் சார்தல் வேண்டும்’’ என்று
அன்னவர் தொழுதலும். அவரொடு ஏகினான்
இன்னன பல்பகல் இறந்தபின்-இவ்வாறு பல நாட்கள் சென்றபின்;
திருநல் நுதல் மடந்தையர் - அழகிய நல்ல நெற்றியை உடைய
அப்பெண்கள்; நவை இல் மாதவன் தன்னை -குற்றமில்லாத சிறந்த
தவத்தை உடைய அக்கலைக் கோட்டு முனிவனை; எம்மிடத்தினும்
சார்தல் வேண்டும் என்று - எங்கள் இருப்பிடத்துக்கும் தாங்கள்
எழுந்தருள வேண்டும் என்று கூறி;அன்னவர் தொழுதலும்- அம்மகளிர்
வணங்கிவேண்டிட; அவரொடும் ஏகினான் - அம்முனிவனும்
அவர்களுடன் சென்றான்.
இன்னன: இவ்விதமாக. இறுத்தல்: கழிதல். பகல்: நாள். திரு: அழகு.
மடந்தையர்: இளம்பெண்கள்(மடம்: இளமை.) நவை: குற்றம்
அப்பெண்கள் விபாண்டகர் இல்லாத சமயம் பார்த்து. பல நாட்கள்
வந்து பழகியவர்கள். ஒருநாள்எம் இருப்பிடத்துக்கும் வரவேண்டும்
என்று தொழுது வேண்ட. கலைக் கோட்டு
முனிவன் அவர்களுடன செல்லலானான் என்பது கருத்து. 43
