திரு அவதாரப் படலம் - 221

bookmark

221.

‘திருந்து இழையவர். சில தினங்கள் தீர்ந்துழி.
மருந்தினும் இனியன் வருக்கை. வாழை. மாத்
தருங் கனி பலவொடு. தாழை இன் கனி.
‘’அருந்தவ. அருந்து’’ என. அருந்தினான்அரோ
 
திருந்து      இழையவர்    -    திருந்திய    அணிகலன்களை
அணிந்திருப்பவர்களாகிய   அப்பெண்கள்;   சிலதினங்கள்  தீர்ந்துழி
- சில  நாட்கள்  சென்ற பிறகு மருந்தினும்  இனியன  -   அமுதத்தை
விட  இனிமையாகிய;  வருக்கை  வாழை  மா - பலா.  வாழை.   மா
(என்னும்   மூவகை  மரங்களும்;  தரும்கனி  பலவொடு -  தருகின்ற
பழங்கள்    பலவுடனே;     தாழையின்   கனி - தேங்காய்களையும்
(கொணர்ந்து);    அருந்தவ    அருந்தென - அரிய  தவமுனிவரே !
இவற்றை    அருந்துவீராக    என   வேண்ட;   அருந்தினான்   -
அம்முனிவனும் அவற்றை உண்டான்.

அரோ:     அசை. இழை: மணிகள் பதித்துச்  செய்யப்பட்டமையால்
இப்பெயர்   பெற்றதென்பர்.   திருந்திழை:   இப்போது    அம்மகளிர்
திருத்தமான  நகைகள்  அணிந்து  வந்திருந்தனர்  என்பது    குறிப்பு.
தீர்ந்துழி  என்பதில்  ‘உழி’  காலப்  பொருளை உணர்த்தும்.   மருந்து:
அமுதம்.   வருக்கை:  பலா.  தாழை:  தென்னை.  தாழையின்    கனி:
தேங்காய்    “ தெங்கின்  பழம்  வீழ ’’ என்பது  சிந்தாமணி.    தமது
உறைவிடம்   சென்ற   மகளிர்.   சில   நாட்கள்  கழித்து    மீண்டும்
முனிவனிடம்   வந்து.   பலவகைப்   பழங்களைத்    தந்து   உண்ண
வேண்டினர். அம்முனிவனும் அவற்றை உண்டான்.                42