திரு அவதாரப் படலம் - 220

bookmark

220.

அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து.
“இருக்க” என. இருந்த பின். இனிய கூறலும்.
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழா.
பொருக்கென எழுந்து போய். புரையுள் புக்கனர்.
 
அருக்கியம் முதலினோடு-அருக்கியம் முதலான  உபசரிப்புகளோடு;
ஆசனம்  கொடுத்து-  அமர்வதற்கு உரிய ஆசனமும் தந்து;  இருக்க
என  இருந்தபின்-  அமர்வீராக  என முனிவன்  கூற  அந்த  மகளிர்
அமர்ந்ததன்  பின்னர்;  இனிய  கூறலும்-  இனிய  உரையால் முகமன்
கூறி வரவேற்க; முருக்கு இதழ் மடந்தையர்-  முருக்கம்  பூப் போன்ற
உதடுகளை   உடைய  அப்பெண்கள்;  முனிவரைத்  தொழா-  அந்த
முனிவனைத்  தொழுது  (பின்பு);   பொருக்கென   எழுந்து  போய்-
விரைந்தெழுந்து சென்று; புரையுள் புக்கனர்- தமது  பன்ன  சாலையை
அடைந்தனர்.

அருக்கியம்-   கைகழுவ நீர் தருதல். வீட்டுக்கு வந்த  விருந்தினரை
உபசரிக்கும்  முறைகளாக.  கை  கழுவவும்.  கால்  அலம்பவும்.   வாய்
கொப்பளிக்கவும்  நீர்  தருதல்  கூறப்படும்   இவைகளை   அருக்கியம்.
பாத்யம்.  ஆசமணீயம் என்பர் வடநூலார்.  அதனை   இங்கு. கம்பரும்
‘அருக்கியம்’  என்றார்.  ஆசனம்-  இருக்கை  இனிய  கூறல்:  முகமன்
கூறுதல். முருக்கு: முள் முருங்கைப் பூ. பெண்களின்  உதடுகளுக்கு  இம்
மலரை  உவமை  கூறுவர். தொழா: தொழுது (செயா என்ற  வாய்பாட்டு
வினையெச்சம்)  பொருக்கென:  விரைவுக் குறிப்புச் சொல்.  புரை:  வீடு
இங்குப் பன்னசாலையைக் குறிக்கும்.

வந்த    மகளிரை முனிவர்கள் எனக் கருதி- அருக்கியம்  முதலியன
தந்தும்   ஆசனமளித்தும் -  முகமன்  கூறியும்    உபசரித்துக்  கலைக்
கோட்டு முனிவனை    அப்பெண்கள்  தொழுது    விரைந்தெழுந்ததும்
உறைவிடம் சென்றனர் என்பது கருத்து.                         41