திரு அவதாரப் படலம் - 216

bookmark

216.

ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ்
   மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை
   யாவது?” எனக் குணிக்கும் வேலை.
சோதி நுதல். கரு நெடுங் கண். துவர் இதழ் வாய்.
   தரள நகை. துணை மென் கொங்கை.
மாதர் எழுந்து. “யாம் ஏகி. அருந் தவனைக்
   கொணர்தும்” என. வணக்கம் செய்தார். 
 
ஓத  நெடும் கடல் ஆடை- குளிர்ந்த பெரிய  கடலை ஆடையாக
உடைய; உலகினில் வாழ் மனிதர்- இவ்வுலகிலே வாழும் மனிதர்களை
எல்லாம்;  விலங்கு   எனவே   உன்னும்-    விலங்குகள்   என்றே
நினைத்திருக்கின்ற;   கோதில் குணத்து  அருந்தவனை-   குற்றமற்ற
குணங்களை  உடைய  அரிய  தவத்தை   உடைய  அந்த  முனிவனை;
கொணரும்  வகையாவதெனக் குனிக்கும் வேலை- இங்கு  அழைத்து
வரக்கூடிய    வழி யாது என்று சிந்திக்கும் போது; சோதி  நுதல். கரு
நெடுங்கண்     துவரிதழ் வாய். தரள  நகை  -  ஒளி பொருந்திய
நெற்றியையும்  கருமையான  நீண்ட  கண்களையும்   பவளம்  போன்ற
உதடுகளையும்  கொண்ட  வாயையும்  முத்துப் போன்ற    பற்களையும்;
துணை  மென்  கொங்கை  மாதர்- மெத்தென்ற இரு  தனங்களையும்
உடைய பெண்கள்; எழுந்து யாம் ஆகி அருந்தவனைக் கொணர்தும்
என வணக்கம் செய்தார்- அந்த அவையிலே எழுந்து நின்று.  நாங்கள்
சென்று  அத  தவமுனியை  அழைத்து  வருவோம்  என்று  வணங்கிக்
கூறினர்.

ஓதம்:    குளிர்ச்சி. நெடுங்கடல்: பண்புத்தொகை.  சுற்றிலும் கடலால்
சூழப்பட்ட  உலகை  “கடல்  ஆடை உலகு” என்றார். ‘நீராரும்   கடல்
உடுத்த   நில   மடந்தை’   என்பார்.   வாழ்மனிதர்:   விதைத்தொகை.
குணித்தல்:  சிந்தித்தல்.  “சோதிநுதல்....... மாதர்” எனக்   கூறியிருக்கும்
வருணனைகளாலும்.  யாம்  சென்று முனிவனை  அழைத்து  வருவோம்
என்று  கூறிய  துணிவுடைமையினாலும்  அம்மாதர் விலை    மகளிராம்
என்பது  புலனாகும்.  “கொணர்தும்”  ‘தும்’  காலம்  காட்டும்   விகுதி.
தன்மைப் பன்மை வினைமுற்று.

மனிதர்களை     விலங்குகளாகக்  கருதும்.   அந்தக்    குற்றமற்ற.
தவமுனியை  இங்கு  அழைத்து  வரும்  வகை   யாது  என.  மன்னன்
சிந்திக்கின்ற வேளையில். மாதர் சிலர் எழுந்து நாங்கள்  சென்று  அந்த
அருந்தவனை இங்குக் கொணர்வோம் என்றனர் என்பது கருத்து.     37