திரு அவதாரப் படலம் - 207

bookmark

207.

அருல் தரும் கமலக்கண்ணன்
   அருள்முறை. அலர் உளோனும்
இருள் தரும் மிடற்றினோனும்.
   அமரரும். இனையர் ஆகி
மருள் தரும் வனத்தில். மண்ணில்.
   வானரர் ஆகி வந்தார்;
பொருள்தரும் இருவர் தம்தம்
   உறைவிடம் சென்றுபுக்கார்.
 
அருள்தரும்    கமலக் கண்ணன் அருள்முறை-   கருணைமிக்க
தாமரைக்   கண்ணனாகிய  திருமால்  அருள்  செய்த   முறைப்படியே;
அலருளோனும் இருள்தருமிடற்றினோனும்-தாமரை மலரில்  உறையும்
பிரமனும் இருண்டமிடற்றை உடைய சிவபிரானும்; அமரரும்  இளையர்
ஆகி-    மற்றத்    தேவர்களும்     மேலே    கூறிய    முறைப்படி
வடிவெடுத்தவராகி;    மருள்தருவனத்தில்-   இருண்ட   காடுகளிலும்;
மண்ணில் வானரராகி வந்தார்-  நிலத்திலும்  குரங்குகளாக  உருமாறி
வந்துள்ளார்கள்;  பொருள்தரும் இருவர்- எல்லோரும்  பொருட்டாகக்
கருதிப்   போற்றும்   பிரமன்.  சிவன்   ஆகிய   இருவரும்;  தம்தம்
உறைவிடம்  சென்று  புக்கார்- தங்கள். தங்கள்  உறைவிடங்களுக்குச்
சென்று சேர்ந்தார்கள்.

பாற்கடலைக் கடைந்த போது எழுந்த  நஞ்சை உண்டு. தேவர்களைக்
காத்தபோது   அந்த    நஞ்சு   மிடற்றிலே   நின்றுவிட   சிவபிரான்
நீலகண்டனாயினான். அதனையே  “இருள்தருமிடற்றினோன்”   என்றார்.
பொருள்தரும்: குறிப்பிட்டுக் கூறத்தக்க  இருவர் பிரமனும்.  சிவபிரானும்
என்பதைக்   குறித்தது.  திருமால்  அருளிய   முறைப்படி   தேவர்கள்
யாவரும்  வானரங்களாகித்  தங்கள்   இருப்பிடங்களை   அடைந்தனர்
என்பது கருத்து.                                           28