திரு அவதாரப் படலம் - 198

bookmark

198.    

என்றனர். இடர் உழந்து. இறைஞ்சி ஏத்தலும்.
மன்றல் அம் துளவினான். ‘வருந்தல்; வஞ்சகர்-
தம் தலை அறுத்து. இடர் தணிப்பென் தாரணிக்கு;
ஒன்று நீ கேண்ம்’ என. உரைத்தல் மேயினான்.
 
என்றனர்  இடர்  உழந்து  இறைஞ்சி   ஏத்தலும்   -   என்று
கூறியவர்களான தேவர்கள் துன்பத்தால் வருந்தி.  திருமாலைத்  துதித்து
வணங்கிடவும்;  மன்றல்  அம்  துளாவினான்-   மணமும்.  அழகும்
உடைய  துழாய் மாலையணிந்த  திருமால்;  வருந்தல்   ‘வஞ்சகர்தம்
தலை  அறுத்து தாரணிக்கு  இடர் தணிப்பென்-   (அத்தேவர்களை
நோக்கி)   வருந்தாதீர்கள்!   வஞ்சக    அரக்கர்களின்    தலைகளைத்
துணித்து உலகத்தின்  துன்பத்தைத் தணிப்பேன்; ஒன்று நீர்   கேண்ம்
என  உரைத்தல்  மேயினான் -  அதற்குரியதொன்றைக்  கேளுங்கள்
என்று சொல்ல. ஆரம்பித்தான்.

மன்றல்:    மிகுமணம். வருந்தல்: அல்லீற்று எதிர்மறை  வியங்கோள்
எதிர்  மறை.  கேளும்  என்பது   கேண்ம்  என   வந்தது  விகாரமும்
சந்தியுமாம்.   ‘ம்’:   மகரக்   குறுக்கம்.    வஞ்சகர்:    மாயத்தொழில்
வல்லோர்.                                                 19