தாடகை வதைப் படலம் - 415
தாடகை இறந்தது இராவணனுக்கு
ஓர் உற்பாதமாம் எனல்
415.
பொடியுடைக் கானம் எங்கும்
குருதிநீர் பொங்க வீழ்ந்த
தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த்
தாடகை. தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு. அந் நாள்.
முந்தி உற்பாதம் ஆக.
படியிடை அற்று வீழ்ந்த
வெற்றிஅம் பதாகை ஒத்தாள்.
பொடி உடைக் கானம் எங்கும்- புழுதி நிறைந்த அந்தக்
காடெல்லாம்; குருதிநீர் பொங்க வீழ்ந்த - இரத்தம் நிறைந்து
பொங்கும்படி வீழ்ந்த; தடிஉடை எயிற்றுப் பேழ்வாய்த் தாடகை -
தடித்த உடலும் கோரைப் பற்களும் குகை போன்ற வாயும் கொண்ட
தாடகை என்னும் அவ்வரக்கி; தலைகள் தோறும் முடியுடை
அரக்கற்கு - தலைகள் தோறும் மணிமுடியை உடைய பத்துத்
தலைகளை உடைய அரக்கனாகிய இராவணனுக்கு; முந்தி உற்பாதம்
ஆக - பின்னால் அழிவதற்கு முந்திய கேடுகால அறிகுறியாக; அந்நாள்
படியிடை இற்று வீழ்ந்து அந்த நாளில் பூமியில் ஒடிந்து வீழ்ந்த;
வெற்றி அம் பதாகை ஒத்தாள் - வெற்றிக் கொடியை ஒத்திருந்தாள்.
பொடி: புழுதி. கானம்: காடு. குருதிநீர்: இரத்தம். தடியுடை எயிறு;
பற்களிடையே புலால் துண்டுகள் சிக்கியிருக்கும். பேழ்வாய்:
திறந்தவாய். உற்பாதம்: கெடுங்கால அறிகுறி. அழிவுக் காலத்தின்
முன்அறிகுறி. தடித்த உடலை உடைய தாடகை வீழ்ந்தது -
இராவணனது வெற்றிக் கொடி ஒடிந்து வீழ்ந்ததை ஒத்திருந்தது
என்பது கருத்து. இது தற்குறிப்பேற்ற அணி. 52
