தாடகை வதைப் படலம் - 407
விசுவாமித்திரன் தாடகையைக் கொல்லுக எனல்
407.
‘ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்?பகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அறன் அன்று; அரக்கியைக்
கோறி’ என்று. எதிர் அந்தணன் கூறினான்.
ஈறில் நல் அறம் பார்த்து இசைத்தேன் - அழிவில்லாத
நல்லறத்தை நோக்கியே கூறினேன்; இவள் சீறி நின்று இது
செப்புகின்றேன் அலேன் - இவளைக் கோபித்து நின்று இதனை நான்
சொல்கிறேன்; ஆறி நின்றது அறன் அன்று - எனவே அரச
குலத்தவனாகிய நீ இவளது தீச்செயலை அறிந்தும் இவ்வாறு தணிந்து
நிற்பது தருமம் அல்ல; அரக்கியைக் கோறி என்று எதிர் அந்தணன்
கூறினான் - இந்த அரக்கியைக் கொல்வாயாக என்று எதிர் நின்று
விசுவாமித்திரன் கூறினான்.
ஈறு: முடிவு (அழிவுமாம்). நல்லறம்: உயிர்களுக்கு நன்மை
தரும்பொருட்டுச் செய்யும் அறம். இசைத்தல்: சொல்லுதல். சீறி:
சினம்கொண்டு. செப்புதல்: சொல்லுதல். ஆறி: தணிந்து. கோறி:
கொல்லுதி. கொலையிற் கொடியாரை வேற்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்டதனோடு நேர் என்பது குறளறம். உயிர்களுக்குத் தீங்கு
செய்யும் இவளைக் கொல்வதுதான் அறம். ஆறி நின்றது அறம்
அன்று என்பது கருத்து. 44
