தாடகை வதைப் படலம் - 398
ஆடவர் ஆண்மை இவள் பேர் சொன்னாலும்
அகலும் எனல்
398.
‘நாண்மையே உடையார்ப் பிழைத்தால். நகை;
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமேல்.
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே?
நாண்மையே உடையார்ப் பிழைத்தால் நகை- நாணம் முதலான
பெண்மைக் குணம் உடையவர்களுக்குத் தீங்குசெய்தால் அது கண்டு
வீரம் மிக்க ஆடவர் நகைத்துப் பரிகசிப்பர்; வாண்மையே பெற்ற
வன்திறல் ஆடவர் தோண்மையே - வாள்முதலான போர்க்
கருவிகளில் வல்ல வலிமைமிக்க வீரர்களான ஆண்களின்
தோளாற்றலும்; இவள் பேர் சொலத் தோற்கு மேல் - இத்தாடகையின்
பெயரைச் சொல்லக் கேட்டவுடன் தோற்று விடுமென்றால்; ஆண்மை
என்னும் அது ஆரிடை வைகும் - ஆண்மை என்று கூறும் அந்த
அஞ்சாத பண்பு யாரிடம் இருக்கும். (சிந்தித்துப்பார்) என்றபடி.
நாண்மை: நாணம். உடையார்: உடையாரை. பிழைத்தால்:
தவறுசெய்தால். நகை: சிரிப்புக் கிடமாகும். வன்திறல்: வலியதிறமை.
தோண்மை: தோளாற்றல் ஆண்மை யாரிடம் இருக்கும்? பெண்
வடிவுடைய இவளிடமா? இவள் பெயரைக் கேட்டதும் தோற்கும்
ஆண்களிடமா? என்று கேட்டான். விசுவாமித்திரன் என்பது கருத்து.
வைகும்: தங்கும். 39
