தாடகை வதைப் படலம் - 397

bookmark

தாடகையைப் பெண்ணல்லள் எனல்

397.

‘தீது என்றுள்ளவை யாவையும் செய்து. எமைக்
கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை;
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்.
மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்!
 
தீது  என்று  உள்ளவையாவையும்  செய்து   -   தீமை  என்று
இருப்பவையாகிய  எல்லாச்  செயல்களையும்   செய்துமுடித்து;   எமை.
கோது   என்று  உண்டிலள்  -  எம்மைப் போன்ற   முனிவர்களைச்
(சாரமில்லாத)  சக்கை  என்று  உண்ணாது  விட்டனள்;   இத்தனையே
குறை  -  அவள் செய்த தீய செயல்களில்  இவ்வளவவே  குறை; யாது
என்று  எண்ணுவது  -  இத்தகையவளை  என்னவென்று  நினைப்பது;
இக்கொடியாளையும் -  இத்தகைய  கொடுஞ்செயல்   உடையவளையும்;
மணிப்பூணினாய் - மணிகளாலான  அணிகலன்களை  அணிந்திருக்கும்
ராம பிரானே!; மாது என்று எண்ணுவதோ - பெண் என்று நினைத்தல்
ஒண்ணுமே? கூடாது என்றபடியாம்.

தீது:   தீய  செயல்கள்.  உள்ளவை:  குறிப்பு    வினையாலணையும்
பெயர்.  எம்  உளப்பாட்டுப்  பன்மை.  கோது:    சாரமற்றது  (சக்கை).
குற்றம்  குறை:  குறைவு. அரசகுமாரன் என்பதால்   ‘’மணிப்பூணினாய்’’
என்றார்.                                                  38