தாடகை வதைப் படலம் - 394

bookmark

தாடகை இராம லக்குமணர்களை நோக்கிச் சினத்தல்

394.

மேகம்அவை இற்று உக 
   விழித்தனள்; புழுங்கா.
மாக வரை இற்று உக உதைத்தனள்;
   மதித் திண்
பாகம் எனும் முற்று எயிறு
   அதுக்கி. அயில் பற்றா.
‘ஆகம் உற உய்த்து. எறிவென்’ என்று.
   எதிர் அழன்றான்.
 
மேகம்  அவை அற்று உகவிழித்தனள்- மேகங்கள்  தொடக்கற்று
உதிரும்படி  பார்த்தவளாகி;  புழுங்கா -  மனப்புழுக்கத்தை  அடைந்து;
மாகவரை அற்று உக  உதைத்தனள்  -  தான்   வரும்  அப்பெரிய
மலையும்      அற்றுப்     போய்    உதிருமாறு    உதைத்தவளாகிய
தாடகை;மதித்திண் பாகம் எனும்முற்று  எயிறு அதுக்கி - சந்திரனது
வலிமைமிக்க   ஒரு   பாகம்  என்று  சொல்லத்தக்க முதிர்ந்த பற்களை
அதுக்கி; அயில்பற்றா ஆகம்  உற  உய்த்து  எறிவென்  -   தனது
சூலத்தைப்   பற்றிக்  கொண்டு. உங்கள் உடலில் பொருந்துமாறு  இதை
எறிவேன்;  என்று எதிர் அழன்றான் - என்று சொல்லி. எதிரே நின்று
சினம் கொண்டு சீறினாள்.

மேகம்   அவை:  மேகங்கள் என்று சொல்லப்படும் அவை. புழுங்கா:
செயா  என்னும்   வாய்பாட்டு  வினையெச்சம். ‘பற்றா’ என்பதும்  அது.
பாகம்:   பிரிவு  முற்று  எயிறு:   முதிர்ந்தபல்  உய்த்தல்:   அழல்தல்:
சினத்தல்.

தாடகையின்   பற்களை  ‘மதித்திண்  பாகம் எனும் எயிறு’  என்றார்
‘சந்திரனது  திண்ணிய  ஒரு  பகுதியோ   என்று   நினைக்கும்படியான
பற்கள்’ என்பது பொருள் உய்த்து: செலுத்தி  என்பது பொருள்.  ஆகம்:
மார்பு  ஆகம்  உறு:  மார்பில்   பொருந்தும்படி  வீசுவேன்  என்றாள்
என்பது பொருளாகும்.                                       35