தாடகை வதைப் படலம் - 393
393.
‘கடக்க அரும் வலத்து எனது காவல் இது; யாவும்
கெட. கருவறுத்தனென்; இனி. ‘’சுவை கிடக்கும்
விடக்கு அரிது’ எனக் கருதியோ? விதிகொடு உந்த.
படக் கருதியோ? - பகர்மின். வந்த பரிசு!’ என்றே.
கடக்க அறும் வலத்து எனது காவல் இது - வெல்லுதற் கரிய
வலிமை உடைய என்னுடைய ஆட்சிக்கு உட்பட்டது இது; யாவும்
கெட கரு அறுத்தனென் - இங்குள்ள எல்லாம் கெடும்படி கரு
வறுத்துவிட்டேன்; இனி சுவை கிடக்கும் விடக்கு அரிது
எனக்கருதியோ - இனிமேல் எனக்குச் சுவைமிக்க ஊன் கிடைப்பது
அரியது என்று எண்ணியோ (அல்லது); விதிகொடு உந்த படக்
கருதியோ - விதி தனது வலிமைகொண்டு தள்ள நீங்கள் அழிந்து
போக நினைத்தோ; வந்த பரிசு பகர்மின் என்றே - இங்குவந்த
தன்மையைச் சொல்லுங்கள் எனச் சொல்லி.
‘’என்றே. ஒரு வார்த்தை உரை செய்தனள்’’ எனக் கூட்டிப்
பொருள் கூறினும் பொருந்தும். கடக்க+அரும்: கடக்கரும் ‘அகரம்
தொக்கது வலத்த (வலம்+அத்து+அ) பெயரெச்சம். காவல்:
தொழிற்பெயர். கரு அறுத்தல்: இளமையிலேயே அழித்துவிடல்
விடக்கு: ஊன் ‘கொண்டு’ என்பது இடைக் குறையாய் ‘கொடு’ என
நின்றது. பட: அழிய பகர்மின்: ஏவற்பன்மை பரிசு: விதம் எவராலும்
வெல்ல முடியாதவள்யான். எனது காவலுக்குரிய இந்த நிலத்திலே
உள்ளதெல்லாம் அழியும்படி கருவறுத்துவிட்டேன். எனக்குத் தின்ன
ஊன் கிடையாதென்றெண்ணி. உணவாக வந்தீர்களோ. விதி உந்த
அழிய வந்தீர்களோ? கூறுங்கள் என்றாள் என்பது பொருள். 34
