தாடகை வதைப் படலம் - 389
389.
சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக. அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக. நிலக் கிரிகள் பின் தொடர. வந்தாள்.
சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும் - கால்களில்
அணிந்த சிலம்புகளுக்கிடையே மலைகளைச் செறியும்படி வைத்த
கால்களோடும்.; நிலம்புக மிதித்தனள் - நிலம் கீழே புகும்படி
மிதித்தாள்; நெளித்த குழி வேலைச்சலம் புக - அதனால்
நெளியப்பெற்ற குழியில் கடல் நீர்புகவும்; அனல்தறுகண் அந்தகனும்
- நெருப்பென விழிக்கும் வலிமைமிக்க எமனும்; அஞ்சிப் பிலம்புக -
பயந்து. குகையில் புகுந்து ஒளியவும்; நிலக்கிரிகள் பின்தொடர
வந்தாள் - நிலத்திலுள்ள மலைகளெல்லாம் பின்னே தொடர்ந்து
வரவும் தாடகை வந்தாள்.
சிலம்புகள்: மலைகள். சிலம்பு; பாதச் சிலம்பு. செறித்த; அமைத்த;
மலைகளைப் பதித்துச் செய்த காற்சிலம்புகளை அணிந்திருக்கிறாள்
என்பது கருத்து. கழல்: பாதம். நெளித்து: நெளியச் செய்த (பிறவினை).
அந்தகன்: எமன். பிலம்: குகை. பாதத்தாலம் நிலம் கீழே செல்ல
மிதித்தாள். அதனால் உண்டான குழியில் கடல் நீர்வந்து புகுந்தது.
எமனும் அவளைக் கண்டு அஞ்சியோடி குகையில் சென்று
ஒளியலானான். நிலத்திலுள்ள மலைகளெல்லாம் தன்னைப் பின்
தொடர்ந்துவர. அவ்வரக்கி வந்தாள் என்பதாம். சலம்: நீர். தறுகண்:
வலிமை. தாடகையின் வருகையையும். அவளது தோற்றத்தையும்
இவ்வாறு புனைந்து கூறுகிறார். 30
