தாடகை வதைப் படலம் - 388

bookmark

தாடகை வருதல் (388-389)

388.

கைவரை எனத் தகைய
   காளை உரை கேளா.
ஐவரை அகத்திடை அடைத்த
   முனி. ‘ஐய!
இவ் வரை இருப்பது அவள்’
   என்பதனின் முன்பு. ஓர்
மை வரை நெருப்பு எரிய
   வந்ததென. வந்தாள்.
 
கைவரை   எனத்தகையகாளை  -  துதிக்கையையுடைய மலையை
ஒத்ததான    யானை    போன்றவனும்.   காளையை  ஒத்தவனுமாகிய
இராமன்; உரைகேளா  -  உரையைக்  கேட்டு;  ஐவரை அகத்திடை
அடைத்தமுனி     -    இந்திரியங்கள்    ஐந்தினையும்   மனத்தில்
அடக்கியமுனிவன்; ஐய!அவள்   இருப்பது  இவ்வரை -    இராம
அந்தத் தாடகை இருப்பது இந்த   மலைதான்; என்பதனின் முன்பு -
என்று சுட்டிப் காட்டுவதற்கு    முன்பாக;    ஓர்மைவரை  நெருப்பு
எரிய-  ஒரு கரியமலை. உச்சியில்  நெருப்பு  எரிந்து  கொண்டிருக்க;
வந்தது  என  வந்தாள் - எதிரில்  வந்தது போலத் தாடகை எதிரே
வந்தாள்.

கைவரை:  கையையுடைய   மலை   (அதாவது  யானை).  உவமை
ஆகுபெயராய் ராமனை உணர்த்தும்.  ராமனுக்குக்  காளை உவமையாம்.
உரை:  முதனிலைத்  தொழிற்பெயர்.  கேளா: செயா  என்ற வாய்பாட்டு
வினையெச்சம்.  ஐவர்:  ஐந்து  இந்திரியங்கள்.   அர்:   சிறப்பு விகுதி.
அகம்:   மனம்.  ‘ஓர்  மைவரை  நெருப்பு   எரிய  வந்தது’  என்பது
உருவகம்.  மை:கருமை.  இத்தொழில்   இயற்றுபவள்  எங்கு உறைவது
எனக்கேட்ட   இராமபிரானுக்கு  ‘அவள்   இருப்பது  இவ்வரை’  என
முனிவன்   கூறுவதற்கு   முன்  தாடகை   எதிரே  வந்தாள்  என்பது
பொருள்.                                                29