தாடகை வதைப் படலம் - 364
364.
‘பெரு வரை இரண்டொடும். பிறந்த நஞ்சொடும்.
உரும் உறழ் முழக்கொடும். ஊழித் தீயொடும்.
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம்எனின்.
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே:
பெரு வரை இரண்டொடும் - பெரியமலைகள் இரண்டுடனும்;
பிறந்த நஞ்சொடும் - தன்னிடம் தோன்றிய நஞ்சுடனும்; உரும் உறழ்
முழக்கொடும் - இடிக்கு ஒப்பான முழக்கத்துடனும்; ஊழித் தீயொடும்
- ஊழிக் காலத்துப் பெரு நெருப்புடனும்; இரு பிறை செறிந்து-
இரண்டு பிறைச் சந்திரர்கள் சேர்ந்து; எழுகடல் உண்டாம் எனின்-
எழுகின்ற கடல் ஒன்று உண்டென்றால் அது; வெருவரு தோற்றத்தள்
மேனிமானும் - யாவரும் அஞ்சத்தக்க தோற்றத்தை உடைய அவளது
உடலை ஒத்ததாகும்.
பெருவரை: பெரியமலை. கொங்கைகள் இரண்டும் மலைகள் கண்கள்
இரண்டும். நஞ்சு: பெருங்குரல். இடிமுழக்கம். கூந்தல்: ஊழித்தீ.
கோரைப்பற்கள். பிறைச் சந்திரன் இவையெல்லாம் உடைய கடல்
ஒன்று உண்டெனில் இவள் உடலுக்கு ஒக்கும் எனக் கூறியது
இல்பொருள் உவமை யணியாம். மானும்: ஒத்திருக்கும். 23
