தாடகை வதைப் படலம் - 362
விசுவாமித்திரன் தாடகை வரலாறு கூறுதல்
362.
என்றலும். இராமனை நோக்கி.
‘இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள்.
கூற்றின் தோற்றத்தள்.
அன்றியும் ஐ-இருநூறு
மையல் மா
ஒன்றிய வலியினள்.
உறுதி கேள்’ எனா.
என்றலும் இராமனை நோக்கி- என்று சொன்னதும். இராமனைப்
பார்த்து (விசுவாமித்திரன்); இன்உயிர் கொன்று உழல்வாழ்க்கையள்-
இனிய உயிர்களை எல்லாம் கொன்று திரியும் வாழ்க்கை
உடையவளும்; கூற்றின் தோற்றத்தள் - எமனைப் போன்ற தோற்றம்
உடையவளும்; அன்றியும் ஐ இருநூறுமையல்மா - ஆயிரம்
மதயானைகளுக்கு ஒப்பான.; ஒன்றிய வலியினள் - பொருந்திய
வலிமை உடையவளுமான; உறுதி கேள் எனா - (ஒருத்தி) செய்தியைக்
கேட்பாயாக என்று.
இன்னுயிர்: இனிய உயிர். அவராவார்: முனிவர் முதலானோர். உழல்
வாழ்க்கை வினைத்தொகை (திரிகின்ற வாழ்க்கை). கூற்று: எமன்.
தோற்றத்தள்: தோற்றம் உடையவள். ஐ இரு நூறு: ஆயிரம். மையல்:
வலிமை. மா: மிருகம் (யானை). ஒன்றிய: பொருந்திய. உறுதி: செயல்.
எனா: என்று செயா என்ற வாய்பாட்டு வினையெச்சம். இதுமுதல்
ஏழுபாடல்கள் தாடகையின் வரலாறு கூறுவனவாம். ‘பழிபடா
மன்னவன் பரித்த நாட்டின் ஊங்கு அழிவதென் எனக்கேட்ட
இராமனுக்கு அழிவுக்குக் காரணமான தாடகையைப் பற்றிக்
கூறுவனவாம். 21
