தாடகை வதைப் படலம் - 361
இராமன் வினவுதல்
361.
‘சுழி படு கங்கைஅம் தொங்கல் மோலியான்
விழி பட வெந்ததோ? வேறுதான் உண்டோ?
பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு
அழிவது என்? காரணம். அறிஞ! கூறு’ என்றான்.
சுழிபடுகங்கை அம்தொங்கல் மோலியான்- சுழித்து வரும் நீர்ப்
பெருக்கை உடைய கங்கையும். கொன்றை மாலையும் அணிந்த
முடியை உடைய சிவபிரானது; விழிபட வெந்ததோ - நெற்றிக்கண்
பட்டு இப்படி வெந்துபோனதோ?;; வேறு தான் உண்டோ - அல்லது
வேறு காரணம் ஏதேனும் உண்டோ?; பழிபடா மன்னவன் -
பழிச்சொல் படாத மன்னனாகிய எம் தந்தை; பரித்த நாட்டின் ஊங்கு
- நல்லாட்சி செய்யும் நாட்டிலும் இவ்விடம்; அழிவதென் காரணம் -
இப்படி அழிந்து போதல் என்ன காரணமோ?; அறிஞ! கூறு என்றான்
- யாவுமறிந்த பெரியோய்! சொல்லுக என்றான்.
அழி: பகுதித் தொழிற்பெயர். தொங்கல்: மாலை
(தொங்குமாறணிவது). மோலி: மகுடம் (இங்குச் சடைமுடி). ‘’விழிபட
வெந்ததோ? வேறுதானுண்டோ?’’ என்றது ஐயவணி. பழிபடா:
பழிக்காளாகாத. அறிஞ: அண்மைவிளி. ஊங்கு: முன்புள்ள இடத்தை
உணர்த்தும். ‘உப்பக்கம்’ என்பர் வள்ளுவர். அது போன்றது என்க.
‘விழிஎனக் கூறினும் இங்கு நெற்றிக்கண்ணை உணர்த்தும். தீக்கண்
அதுதானே! 20
