தாடகை வதைப் படலம் - 359
விசுவாமித்திரன் பலை அதிபலை என்னும்
அருமறைகள் இரண்டையும் அரசிளங்குமரர்க்கு உபதேசித்தல்
359.
நோக்கினன் அவன் முகம்; நோக்க. நோக்குடைக்
கோக் குமரரும் அடி குறுக. நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அவ் வழி
ஊக்கினன்; அவை அவர் உள்ளத்து உள்ளினார்.
அவர் முகம் நோக்கினன் - (விசுவாமித்திர முனிவன்) அந்த
அரசகுமரர்களுடைய முகங்களைப் பார்த்தான்; நோக்க. நோக்குடைக்
கோக்குமரரும்- அவ்வாறு பார்க்கவே. அக்குறித்த பார்வையில்
நோக்கமுடை அவ்வரச குமாரர்களும்; அடிகுறுக - முனிவரின்
பாதங்களை வணங்க; நான்முகன் ஆக்கிய விஞ்சைகள் இரண்டும் -
பிரம தேவனால் செய்யப்பட்டுத் தனக்களிக்கப்பட்ட இரண்டு அரிய
வித்தைகளை; அவ்வழி ஊக்கினன் -அப்பார்வையின் வழியே
அவர்கள் மனத்தில் பதியுமாறு ஊக்குவித்தான்; அவை அவர்
உள்ளத்து உள்ளினார்- அவைகளை அக்குமரர் தமது உள்ளத்தில்
நினைத்தனர்.
நோக்கின் வழி ஊக்கினன் என்பது நயன தீட்சை எனப்படும்.
நோக்கு: நோக்கம் ‘நோக்குடைக் கோக்குமரர் அடிகுறுக’ என்றது.
முனிவரது மனக் குறிப்பை உணர்ந்த குமாரர்கள் அவரை அடைந்து
அருள் செய்யுமாறு வணங்கி நின்றனர் எனும் கருத்துடையதாகும்.
நான் முகன் ஆக்கிய விஞ்சைகள் இரண்டு. பலை அதிபலை என்ற
மந்திரங்களாகும். இவைகளை முனிவருக்குச் சொன்னது பிரமன்
என்பது கம்பர் கருத்து. விஞ்சை: வித்தை. ஊக்குதல்: செலுத்துதல்.
உள்ளுதல் - நினைத்தல் பூவின் மெல்லியர் வருந்துவர் என நினைத்த
முனிவர் இராம இலக்குவர்களைப் பார்க்க. அவர்கள்
முனிவனது மனக்கருத்தை அறிந்து அடிகுறுக. நான்முகன் ஆக்கிய
விஞ்சைகள் ஊக்கினர். அவற்றை அவர் உள்ளத்து உன்னினர்
என்பது கருத்து. 18
