தாடகை வதைப் படலம் - 352
352.
புழுங்கு வெம் பசியொடும் புரளும்பேர் அரா
விழுங்கு வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்வாய்.
முழங்கு திண் கரி புகும் முடுகி - மீமிசை
வழங்கு வெங் கதிர் சுட. மறைவு தேடியே!
புழுங்கு வெம்பசியொடு - புழுக்கத்தைத்தரும் மிக்க பசியுடன்;
புரளும் பேரரா - அந்தப் பாலையில் புரண்டு்கொண்டிருக்கும் பெரிய
பாம்பானது; விழுங்க வந்து எழுந்து - எதிரில் வருபவர்களை விழுங்க;
எதிர் விரித்த வாயின்வாய் - விரித்துக் கொண்டிருக்கும் அதன்
வாயில்; மீமிசை வழங்கும் வெம்கதிர்சுட - வானத்திலே சூரியன்
வழங்கும் வெப்பக் கதிர்கள் சுடுதலால்; மறைவு தேடி - மறைந்து
கொள்ளுதற்குரிய நிழல் தேடி; முழங்கு திண்கரி முடுகிப்புகும் -
பிளிறும் யானைகள் வேகமாக நுழையும்.
புழுங்கல்: வெப்பத்தால் புழுங்குதல். அரா: பாம்பு (அரவு). பேரரா:
பெரிய பாம்பு. கரி: யானை. மீமிசை: மேலே ‘வானம்’ என்ற பொருள்
தந்து நின்றது. 11
