தாடகை வதைப் படலம் - 351
351.
கண் கிழித்து உமிழ் விடக்
கனல் அரா-அரசு கார்
விண் விழித்து ஒளிரும் மின்
அனைய பல் மணி. வெயில்
மண் கிழித்திட எழும் சுடர்கள்.
மண்மகள் உடல்
புண் கிழித்திட எழும்
குருதியே போலுமே.
வெயில் மண் கிழித்திட- சூரிய வெப்பம் நிலத்தை வெடிக்கச்
செய்வதால்; கண்கிழித்து உமிழ் விடக் கனல் - கண்களைக் கிழித்துக்
கொண்டு உமிழ்கிற விட நெருப்பை உடைய; அரா அரசு -
பாதாளத்திலுள்ள பாம்பரசனது; பல்மணி. கார்விண் கிழித்து ஒளிரும்
மின் அனைய - பல பணாமணிகளிலிருந்தும். கரிய மேகங்களைப்
பிளந்து கொண்டு ஒளிவீசும் மின்னலுக்கு ஒப்பாக; எழும் சுடர்கள் -
தோன்றுகின்ற மணிகளின் செவ்வொளியானது; மண்மகள் உடல்
புண்கிழித்திட - நிலமகளின் உடல் புண்ணைக் கிழித்திட; எ?ழும்
குருதி போலுமே - தோன்றுகின்ற ரத்தம் போன்றதாகும்.
‘கண்விழித்து’ என்பதற்கு ஆயிரம்தலைகைள் உடைய
அரவரசனுக்கு உரிய இரண்டாயிரம் கண்கைளையும் கிழித்து கொண்டு
எனப்பொருள் கொள்க. ‘கார் விண்’ என்பது ‘கிழித்தொளிரும் மின்’
என்ற குறிப்பால் மேகம் என்னும் பொருள் பெற்றது.
தற்குறிப்பேற்றணி. 10
