தாடகை வதைப் படலம் - 350

bookmark

350.

பாரும் ஓடாது. நீடாது எனும் பாலதே;
சூரும் ஓடாது கூடாதுஅரோ; சூரியன்
தேரும் ஓடாது. மா மாகம் மீ; தேரின். நேர்
காரும் ஓடாது; நீள் காலும் ஓடாதுஅரோ.
 
பாரும்   ஓடாது  -  நிலமகளும்  (வெப்பம்   பொறுக்காது) அந்த
நிலத்தை   விட்டு   ஓடிப்   போகநினைத்தாலும்   இயலாது;   நீடாது
எனும்பாலதே  -   ஏனெனில்  இடத்தை  விட்டுப்  பெயராத  தன்மை
உடையவளாதலாலே;  சூரும்  ஓடாது  - பாலை நிலத்துகுரிய காளியும்
நீங்காள்;   கூடாது   அரோ   -   நிலத்தெய்வம்  நிலத்தை  விட்டு
நீங்கமுடியாது;   மா  மாகம்  மீ  -  அந்நிலத்துக்கு  மேலே  பெரிய
வானத்திலே; சூரியன் தேரும் ஓடாது - பாலையின் வெப்பம் தாங்காது
குதிரைகள்   சோர்ந்து  போவதால்  பரிதியின் தேரும் ஓடாது; தேரின்
நேர்காரும்   ஓடாது-  ஆராயின்.  அந்நிலத்துக்கு  நேராக  மேகமும்
ஓடாது; நீள் காலும் ஓடாது - வீசுகின்ற காற்றும் அங்குச் செல்லாது.

‘உம்மை’     எல்லாம் எண்ணுப் பொருளன. பார்: நிலமகள்.  சூர்:
கொற்றவை.  பாலது:  தன்மையது.  அரோ இரண்டு அசைகள்.  மாகம்:
வானம். கால்: காற்று. கார்: மேகம் (கருமையினடியாகப் பிறந்தது).    9