தாடகை வதைப் படலம் - 348
348.
விஞ்சு வான் மழையின்மேல் அம்பும் வேலும் பட.
செஞ்செவே செருமுகத்து அன்றியே. திறன் இலா
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து
அஞ்சினார் நெஞ்சுபோல். என்றும் ஆறாது அரோ.
விஞ்சுவான் மழையின்மேல் - வானிலிருந்து பெய்யும்மழை
நீரைவிட மேலாக; அம்பும் வேலும்பட - அம்புகளும். வேல்களும்.
மார்பில் படும்படி: செஞ்சவே செரு முகத்தன்றியே- செம்மையான
போர் முகத்தல்லாது; திறனிலா வஞ்சகர் தீவினைகளால் -
(அறப்போர் செய்யும்) திறமையில்லாத வஞ்சகர்களின் சூழ்ச்சிச்
செயல்களால்; மான மா மணிஇழந்து - (சிறைப்பிடிக்கப்பட்டு) தமது
மானம் என்ற மணியை இழந்து; அஞ்சினார் நெஞ்சுபோல் -
தோல்வியடைந்த மெய்வீரர்களின் மனம் எப்படிக் கொதிக்குமோ அது
போல; என்றும் ஆறாது - பாலை நிலத்தின் வெப்பம் எப்போதும்
ஆறாதிருக்கும்.
அரோ: அசை. விஞ்சுவான்: பூதங்களில் விஞ்சிய வான். வேலை:
முதனிலைதிரிந்த தொழிற் பெயர் இலா: ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம். அஞ்சினார்: வினையாலணையும் பெயர். போர்வீரர்க்கு
அஞ்சுதலாவது வீரம் இருந்தும் அதனைக் காட்ட வழியின்றி
அஞ்சியிருத்தலாம்.
சூழ்ச்சியால் வென்று சிறை வைக்கப்பட்ட உண்மை வீரர்களின்
உள்ளக் கொதிப்பு ஆறாதது போல. பாலையின் வெப்பம் என்றும்
ஆறாது என்றார். 7
