தமிழர் தோன்றிய வரலாறு

bookmark

வரலாறு என்பது ஒரு தொடர் நிகழ்வு என்றும், ஒரு விவாதம் என்றும், அது கடந்த காலம் பற்றிய உண்மைகளால் கட்டப்பட்டது என்றும் சான்.எச். அர்னால்டு கூறுகின்றார். ஆனால் வரலாறு என்பது ‘மாற்றங்களின் வரலாறு’ என்று மார்க்சிய வாதிகள் குறிப்பிடுகின்றனர். எனவே தமிழர்களின் கடந்த கால வரலாற்றையும், நிகழ்கால வரலாற்றையும் அறிந்து கொள்வதற்கு புறநானூறு ஓரளவு துணை செய்கிறது எனலாம்.

தமிழர் தோன்றிய இடம் குமரிக்கண்டம் (இலெமூரியா) என்று அறிஞர்கள் கூறுவர். கடல் கோளால் அழிந்து போன இக்குமரிக் கண்டத்தி லிருந்தே தமிழர்கள் தோன்றினர் என்று தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். இலெமூர்களிடம் காணப்பட்ட சைவ வழி பாடு, பிணத்தை தாழியில் வைத்துப் புதைத்தல், தாய்த்தெய்வ வழிபாடு, தாய்வழி உரிமை போன்ற பழக்க வழக்கங்களின் எச்சங்கள் இன்றும் தமிழர்களிடம் காணப்படுவதால், தமிழர்கள் இலெமூரியாவில் இருந்தே தோன்றி இருக்க வேண்டும் என்று கா.அப்பாதுரையார் கருது கின்றார். குமரிக் கண்டத்திலிருந்து அழிந்து போன பஃறுளி ஆற்றைப் பற்றி, ‘முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி’ (புறம்.9) என்னும் புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது. கடல் கோளுக்குப் பிறகு எஞ்சியிருந்த பழம் பாண்டிய நாட்டுப் பகுதியின் இடையே ‘குமரி’ என்னும் நதி ஓடியது என்பதை, ‘தெனாஅ துருகெழு குமரி’ (புறம்.6) என்னும் புறப்பாடல் எடுத்துக் கூறுகிறது. சிலப்பதிகாரத்திலும் (11:20-21) இச்செய்தி சுட்டப் படுவதைக் காணலாம்.

இராமாயண காலத்திலும், மகாபாரத காலத்திலும் கூட தமிழர்கள் வாழ்ந்து உள்ளார்கள். இதற்குப் பல எடுத்துக் கட்டுகள் உண்டு உதாரணமாக இராமாயணத்தை வால்மீகி முனிவர் சமஸ்கிருத மொழியில் இயற்றினார். இராமாயணக் காலம் தோராயமாக, கி.மு. 1300 முதல் கி.மு.1200 வரை இருக்கலாம் என்று கூறுவர். புறநானூற்றில் உள்ள 358 ஆம் பாடலைப் பாடிய ‘வால்மீகி’ என்பார் இராமாயணம் பாடிய வால்மீகியின் வழி வந்தவராக இருக்கலாம் என்பர். அத்துடன் வால்மீகி முனிவர் தனது ராமாயண காவியத்தில் இராமனின் முடி சூட்டு விழாவின் பொழுது பாண்டியர்கள் பரிசாக ஸ்ரீ இராமனுக்கு முத்துக்களை அனுப்பியதாக எழுதி உள்ளார். இதனால் ராமரின் காலத்தில் பாண்டியர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.

அது போல, மகாபாரதக் காலம் தோராயமாக, கி.மு. 1100 முதல் கி.மு.1000 வரை இருக்கலாம் என்று கூறுவர். மகாபாரதப் போரில் உதியஞ் சேரலாதன் நடுநிலையில் நின்று அனைவருக்கும் உணவு வழங்கினான் என்பதை, ‘அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ’ (புறம்.2) என்னும் புறப்பாடல் விளக்குகிறது.

ஆனால் புற நானூற்றுக் காலத்தில் ஆரிய செல்வாக்கு தலை தூக்கி நின்றது. மன்னர்கள் தமிழர் பண்பாட்டைப் புறக்கணித்து, ஆரியர்களின் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தனர். வேள்வி (யாகம்) செய்வதைப் பெருமையாக மன்னர்கள் கருதினர். அதனால் தான் பாண்டியன் ‘பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்னும் பட்டப் பெயரை ஏற்றுக் கொண்டிருந்தான். அதுவும் ஆரிய முனிவர்களைப் போல ‘குடுமி’ வைத்துக் கொள்வ தில் மன்னர்கள் பெரு விருப்பம் கொண்டிருந்தனர். இருங்கோவேள் (‘நீயே வடவால் முனிவன்’, புறம்.20), பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி (‘இறைஞ்சுக பெரும நின் சென்னி’, (புறம்: 6), கரிகாற் பெருவளத்தான் (‘பெருவை நுகர்ச்சிப் பெருந்தூண் வேத வேள்வித் தொழின் முடித்து’, (புறம். 224) ஆகியோர் ஆரியத் துறவியர்களின் செல்வாக்கிற்கு அடிமைப்பட்டிருந்ததை புறநானூறு காட்டுகிறது.