தமிழர் கப்பற்கலையும் துறைமுகங்களும் ஒரு பார்வை
தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதிலிருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறியலாம்.
கால வாரியாகத் தமிழர் கடல்சார் நுட்பங்கள்
சங்க இலக்கியங்களும் பெரிப்புளுசின் எரித்திரியக் கடற்செலவு, தாலமியின் நிலவியல் கையேடு, பிளினியின் இயற்கை வரலாறு ஆகிய நூல்களும் தமிழகத் துறைமுகங்கள், கடற்கரை வணிக மையங்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன.
சங்ககாலம்
ஓதம் அறிதல் என்பது சங்ககாலம் தொட்டே தமிழர் பயன்படுத்திய கலம் ஓட்டும் தொழில் நுட்பத்தில் ஒன்றாகும். ஓதத்தை (Tide) இரண்டு வகையாக்கி கழி ஓதம் (Tide towards the Shore - High tide), கடல் ஓதம் (Tide towards the Sea - Low Tide) என இரண்டாகப் பிரித்தனர் தமிழர். கழி ஓதத்தின் போது கடல் நீரானது கரை நோக்கி நகரும். ஓதம் குறையும் போது கடல் நோக்கி நீர் நகரும் என்பதால் அப்போதே கரையில் உள்ள கலங்களில் ஏறிக் கடலுக்குள் செல்வர். ஓதம் அதிகமாக இருக்கும் போது தலைவியை ஏன் பிரிந்து செல்கிறாய் தலைவா என்று தலைவியின் தோழி தலைவனை வினவுவது போன்று அகப்பாட்டு ஒன்றும் உண்டு. மேற்கொடுத்த சங்கப்பாடல்களின் மூலம் ஓதம் என்ற இயற்கை சக்தியைக் கலம் ஓட்டத் தமிழர் பயன்படுத்தினர் என அறியலாம்.
முன்துறை என்பது சங்ககாலத்தில் கழிமுகங்களின் வெளிப்பகுதியில் காணப்படும் துறைமுகமாகும். இது கழிமுகத்தின் வெளிப்பகுதியை குறிக்கிறது என்பதை ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தில் கூறப்படும் முன்துறை இலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய் என்னும் வரிகளின் மூலம் அறியலாம். மேலும் இம்முன்துறையில் நாவாய் நங்கூரமிட்டு பாய்மரத்தை மடக்கி வைத்திருக்கும் என்பதை தூங்கு நாவாய், துவன்று இருக்கை என்று பட்டினப்பாலை குறிக்கிறது. நீர்க்கலங்களிலிருந்து நிறை அதிகமான பொருட்கள் இறக்கப்பட்டவுடன் தன் பாய்மரங்களை மீண்டும் உயர்த்தி நீரோட்டம் அதிகமாக இருக்கும் கழிமுகத்தின் உட்பகுதியான பெருந்துறைக்கு செல்லும். இதையே புறம் கூம்போடு மீம்பாய் கலையாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம் என்று ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது. மேற்குறித்த சங்கப்பாடல்கள் கழிமுகங்களில் வெளிப்பகுதியில் நீரோட்டம குறைவு என்பதால் அங்கே உள்ள முன்துறையில் நங்கூரமிட்டு பாய்மரம் இறக்கி நிறை அதிகம் கொண்ட பொருட்களை இறக்கிவிட்டு, கழிமுகத்தின் வாய்ப்பகுதியில் நீரோட்டம் அதிகம் என்பதால் அங்கே பாய்மரத்தை ஏற்றி மிக வேகமாகக் கழிமுகத்தின் உட்பகுதியான பெருந்துறையை அடையுமாம் தமிழர் கலங்கள் என்பதையே குறிக்கின்றன.
சங்ககால தமிழர் கலங்கள் வேந்தர்களால் வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்தப் பட்டதோடு நில்லாமல் இலங்கையை போரில் வெல்லுவதற்கும் பயன்படுத்தப் பட்டது.
தமிழர் கப்பல்கள் வரலாற்றுக் காலம்:-
முதலாம் பாண்டியப் பேரரசு (கி.பி. 550 - 950), சோழப் பேரரசு (கி.பி. 850 - 1250), இரண்டாம் பாண்டியர் பேரரசு (கி.பி. 1150 - 1350) போன்ற காலங்களில் தமிழர் கப்பல்கள் வணிகத்தில் சிறப்புற்றதோடு நில்லாமல் கடல் கடந்து இலங்கை, கிழக்குப் பகுதிகளில் உள்ள பல நாடுகளின் மீது போர் தொடுக்கவும் பயன் படுத்தப் பட்டு உள்ளன. அதிலும் இதற்கெனவே பாண்டியர் ஆட்சியின் கீழ் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட துறைமுகங்கள் செயல்பட்டு வந்தன.
ஆங்கிலேயர் காலம்
"எங்கோ நடுவில் ஆங்கிலேயர் வருவதற்குச் சற்று முன் பிருந்தே நம் கப்பற்கலை சிறிது சிறிதாக ஒதுக்கப்பட்டு, ஆங்கிலேயரின் சுரண்டலில் இறுதியாகச் சமாதியில் இடப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் தமது வாணிபம் பொருட்டு எத்துணை அக்கிரமும் செய்வதில் தயங்கவில்லை என்பதை பிறகு வாழ்ந்து மறைந்த வ. உ. சிதம்பரனார் வாழ்க்கையிலிருந்து அறிகின்றோம்" (நரசய்யா, 140).
"1789 இல், கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் சாதகமாகக் கல்கத்தா கெஜட்டில், இந்திய தச்சர்களோ, பணிமனையினரோ, கொல்லரோ, கப்பல்களில் வேலை செய்ய இயலாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" (நரசய்யா, 154)
1906 இல் ஆரம்பிக்கப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சுதேசிக் கப்பல் கம்பெனி பிரிட்டிஷ் இந்தியா கம்பெனியினதும் அன்றைய காலனித்துவ அரசின் கூட்டுச் சதியினால் அழிவுற்றது. "பிரிட்டிஷ் இந்தியா கம்பெனி சுதேசி கம்பெனியை விடக் குறைவாகக் கட்டணம் விதித்து, துறைமுக அடிவருடி அதிகாரிகளின் தயவால், சுதேசி கம்பெனி கப்பலின் முன்பே சென்று, சிதம்பரம் பிள்ளையின் கப்பலுக்கு வருமானம் இல்லாதவாறு செய்தது. "மேலும், "சிதம்பரம் பிள்ளையவர்களை கைது செய்தது" (நரசய்யா, 155).
நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் எழுதிய "நம் நாட்டுக் கப்பற்கலை" என்னும் நூலில் பண்டைய தமிழரின் கப்பற்கலை பற்றிய பல தகவல்கள் உள்ளன.
தமிழ் மணி
பண்டைய காலங்களில் தமிழர்களின் கப்பலில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று தற்சமயம் நியூசிலாந்து நாட்டில் உள்ள வெலிங்டன் அருங்காட்சியகத்தில் "தமிழ் மணி" ஆக உள்ளது.
பண்டைய தமிழர்களின் துறைமுக விவரங்கள் :-
1. பாண்டியர் துறைமுகங்கள் - 30 துறைமுகங்களுக்கும் மேலாகப் பாண்டியர்கள் துறைமுகங்களைக் கட்டியிருந்தனர்.
2. காவிரிப்பூம்பட்டினம் - சோழர்களின் துறைமுகம் ஆகும்.
3.வஞ்சி, மாந்தைத் துறைமுகம், முசிறித் துறைமுகம் போன்றவை சேரர்களின் துறைமுகங்கள் ஆகும்.
பாண்டியர் காலத்து துறை முகங்களில் முக்கியமான சில வற்றைக் சற்று விரிவாகக் காண்போம் வாருங்கள்.
பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்திற்கும் பெயர் பெற்றிருந்தது. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்தின் வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். இடையே களப்பிரர் படையெடுப்பால் இருண்ட காலத்தைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது. இதற்கு முற்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25 க்கும் மேற்பட்ட துறைமுகப்பட்டினங்களே சாட்சி. இப்பட்டினங்களால் சங்ககாலப் பாண்டியர்த் துறைமுகங்களான கொற்கை, மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது. அதே நேரம் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்றவை மேன்மை அடைந்ததை மார்க்கோ போலோவின் காயல்பட்டினம் குதிரை வணிகக் குறிப்புகளைக் கொண்டும், இபின் பட்டுடாவின் பாண்டியர்-ஏமன் கப்பல்கள் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம். குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறித்ததைக் கொண்டு அக்காலத்தில் பாண்டியர் உலகிலேயே சிறந்த வணிகத் துறைமுகங்களைப் பெற்றிருந்தது தெரிகிறது.
பண்டைய துறைமுகங்கள்:-
பிளைனி மற்றும் தாலமி மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாகக் குறித்தனர். முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர் யவனர்களோடு சிறந்த வணிக உறவு வைத்திருந்தனர். செங்கடல் செலவு என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாகப் பெரிப்ளுசு கூறுகிறார். அத்துறைமுகங்கள் பற்றியும் விவரமாகக் காண்போம் வாருங்கள்.
(அ) கொற்கை:-
கொற்கை என்பது பாண்டிய முடிக்குரிய இளவரசனின் இருப்பிடமாகும். பாண்டியர்களின் மூன்றாம் தலைநகரம் கொற்கை ஆகும். கடல் கொண்ட தென்னாட்டில் இருந்து மீண்ட பரதவர்கள் உருவாக்கியதே கொற்கை. கொற்கை பாண்டியர்களின் முத்து நகரம், பாண்டிய நாட்டு வணிகத் துறைமுகமாகவும், பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாகவும் இருந்தது.
சங்க இலக்கியங்களில் வங்கக் கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.
கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம்
எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம்
நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம்
கொற்கை முத்து சிறந்த முத்தாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது.
கொற்கை துறைமுகமானது அக்காலத்தில் விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
தலையாங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றிவைத்தான்.
கடலலை குவிக்கும் முத்துக்கள் செல்வர் ஏறிவரும் குதிரைக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமையும் அளவுக்குக் கொட்டிக்கிடக்கும். கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோர் தாம் உண்ணும் கள்ளுக்கு விலையாக முத்துக்களைத் தருவர் என்று இவ்வாறாக எல்லாம் பாண்டிய நாட்டின் செழிப்பை சங்க இலக்கிய நூல்கள் விவரிக்கின்றன.
முத்துக்குளிப்பது மட்டுமின்றி வலம்புரிச் சங்கு எடுக்கவும் அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர்.
அங்கு உப்பு விளைவிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த உமட்டியர் கூட கிலுகிலுப்பையில் முத்துக்களைப் போட்டு ஆட்டித் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவர்.
மறப்போர்ப் பாண்டியர் கொற்கையில் முத்துக்களைப் பாதுகாக்க வேங்கடமலைப் பகுதியிலிருந்து கொண்டுவந்த யானைகளைப் பயன்படுத்தினர்.
கொற்கைப் பகுதியில் பழையர் எனப்படும் குடிமக்கள் வாழ்ந்து வந்தனர். அந்தக் குடியைச் சேர்ந்த மகளிர் முத்துக்குளிக்கும் துறையை வழிபட்டு விழாக் கொண்டாடும்போது தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், கிளிஞ்சல்களையும் கொட்டிப் படையல் செய்து மகிழ்ந்தனர்.
கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிட்டு அது பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகவும் எழுதியுள்ளார்.
கொற்கை அகழாய்வுகள்:-
கொற்கை சங்க காலம் தொட்டே ஒரு துறைமுக பட்டினமாய் இருந்து வந்தது. இதன் பழமையை அறிய தமிழ் நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையால் 1968, 1969 களில் இவ்விடத்தில் 12 அகழாய்வு குழிகள் இடப்பட்டன. அதன்படி பொ. மு. 850 ஆம் ஆண்டு மதிக்கத்தக்க பழம்பொருட்கள் கிடைத்தன. அதனால் இந்த அகழ்வாராய்ச்சி தமிழ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பாணை ஒன்று கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காலம் கரிம நாற்படுத்தல் மூலம் கி.மு. 755 ± 95 எனக் கணிக்கப்பட்டது. அதனால் இதன் ஆய்வுகள் தமிழ் எழுத்து வளர்ச்சியின் ஒரு திருப்பு முனையாய் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அகழ்வாராய்ச்சிக் குழிகள் பற்றிய விவரங்கள் :-
மொத்தம் தோண்டப்பட்ட 12 குழிகளில் சில முக்கியக்குழிகள்,
இரண்டாம் குழி
1.62மீ ஆழத்தில் முதுமக்கள் தாழி ஒன்று கிடைத்தது. தமிழகத்தின் தொன்மையான இதே தாழி ஆதிச்சநல்லூரிலும் காணப்படுகிறது.
மூன்றாவது குழி
மூன்றாவது குழியில் செவ்வக வடிவ கட்டிடப்பகுதி ஒன்று காணக் கிடைக்கிறது.
நான்காம் குழி
செங்கற்சுவர் பகுதி. இதன் செங்கற்கள் 14*29*7.5 செ.மீ. அளவினைக் கொண்டிருந்தன. மேலும் இக்கட்டிடத்தின் கீழ் கிணற்றின் உறைகளும் அதன் தெற்கில் கழிவு நீர் கால்வய்க்கான சுவடுகளும் உள்ளன. மேலும் இக்குழியில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், சில கரித்துண்டுகளும் கிடைத்துள்ளது.
ஐந்தாவது குழி
நான்கு சாடிகள், சில எலும்புத்துண்டுகள், மட்கலண்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சில்லுகள் ஆகியவை கிடைத்துள்ளன.
மற்ற குழிகள்
சில சங்குகள், சங்கு வளையல்கள், குறியீடுகள் கொண்ட பாணையோடுகளும் கிடைத்து உள்ளன.
இதில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள்:-
நான்காவது குழியில் கிடைத்த கரித்துண்டின் காலம் பொ.மு. 785 என்று மதிக்கப்படுவதால் (சி 14) அக்காலம் முதலே இங்கு கடல் போக்குவரத்து நடந்தது பற்றி அறிய முடிகிறது.
வகைப்படுத்தல்
இங்கு காணப்படும் நாகரிகத்தை காலத்தைக் கொண்டு 3 வகையாக பகுக்கின்றனர்.
முதல் பண்பாடு - கி.மு. 800 - கி.பி. 400
இரண்டாம் பண்பாடு - கி.பி. 401 - கி.பி. 1000
மூன்றாம் பண்பாடு - கி.பி.1001 - கி.பி.1400
அதன்படி முதற்பண்பாடே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அத்துடன் அழகன்குளம் போன்ற சில பின்வரும் கிராமங்கள் பற்றிய தகவல்களும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்து உள்ளன.
(அ) அழகன்குளம்
அழகன் குளம் (ஆங்கிலம் : Alagankulam) தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமம்.
வரலாறு
பண்டைய காலத்தில் இது ஒரு சமஸ்தானமாகவும் துறைமுக நகராகவும் விளங்கியது; மன்னராட்சி நடைப்பெற்ற இப்பகுதியின் பெயர் அழகாபுரி ஆகும். பின்னர் மருவி அழகங்குளம் என்றும் அழயாங்குளம் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. மன்னர் வாழ்ந்ததற்கு சான்றாக மன்னரின் கோட்டை சிதிலமடைந்து, மண்ணில் புதைந்துள்ளது, புதையுண்ட பகுதி மேடாக காட்சியளிக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்லியல் துறையினரால் மன்னரின் வாள், கேடயம், பொற்காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அமைவு
இராமநாதபுரத்தின் கிழக்கே அமைந்துள்ள இப்பகுதியின் புவியியல் அமைவு 9°21'17"N 78°58'9"E ஆகும். வடக்கே பாக் நீரிணையும் தெற்கே வைகை ஆறும் எல்லையாக உள்ளது. கிழக்கே வைகை முகத்துவாரமும், மேற்கே பனைக்குளம் கிராமமும் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 49 உடன் நதிப்பாலம் மூலமாக இக்கிராமம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிராமத்தின் இன்றைய நிலை:-
சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமாக மக்கள் வாழ்கிறார்கள், இங்குள்ள மக்களின் தொழில் விவசாயம் மற்றும் அரபு நாடுகளில் பணி புரிவதாகும்.
தொழில்
பண்டைய காலம் தொட்டே வெற்றிலை கொடிக்கால், மீன்பிடி மற்றும், கடல் வாணிபமே இங்கு முக்கியத் தொழிலாக இருந்து உள்ளது. மேலும், அக்காலத்திலேயே மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு வாணிப தொடர்பு இருந்துள்ளது. தற்போது வளைகுடா நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகளில் பலர் பணி புரிகின்றனர். இப்பகுதியில் விளையும் வெற்றிலை மாவட்ட அளவில் புகழ் பெற்றதாகும். விவசாயமும் இங்கு அதிகளவில் நடைபெறுகின்றது.
போக்குவரத்து:-
இன்றைய காலத்தில் இங்கு பெரும்பாலும் பேருந்து போக்குவரத்தே பயன்படுகிறது. இது தவிர மகிழுந்து போக்குவரத்தும் உள்ளது.
கல்வி
இங்குள்ள பலரும் மருத்துவம், பொறியியல், வழக்குரைஞர்களாகவும் மலேசியாவிலும் பணிபுரிகின்றனர். கல்விக்கு இங்கு இஸ்லாமிய பாடசாலைகளான அல்மதரசத்துல் ரஷீதிய்யா, அஸ்ரஃபுல் உலூம் என்னும் ஹிப்லு மதரஸாவும் உள்ளது. புதையுண்ட கோட்டையின் மேட்டுப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. தனியாரின் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், நபீசா அம்மாள் நர்சரிப்பள்ளியும் அமைந்துள்ளன. ஒரு அரசு தொடக்கப்பள்ளியும் அமைந்துள்ளது.
விழாக்கள்
இஸ்லாமியப் பெருநாள்களும், மீலாது விழா, அரபிபாட சாலையின் பட்டமளிப்பு விழா, மதரஸா மாணவர்களின் குர்ஆன் ஓதும் போட்டி ஆகியவை இங்கு பிரபலம்.
(ஆ) மருங்கூர்
இம்மருங்கூர் மருங்கூர்ப் பட்டினம் மற்றும் ஊணூர் என்று இரண்டு துறைமுகப்பட்டினங்களை அடக்கியது. தாலமி இதை சாலூர் எனக் குறிக்கிறார்.
மருங்கூர்ப் பட்டினம் : மருங்கூர்ப்பட்டினம் துறைமுகத்தைப் பற்றி நக்கீரர் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அந்தப் பாடல்களில் இருந்து நமக்குக் கிடைக்கும் செய்திகளாவன
கடலோர ஊணூரை அடுத்து மருங்கூர்ப் பட்டினம் இருந்தது. ஊணூர் அரசன் தழும்பன். மருங்கூர்ப்பட்டின அரசன் வழுதி. இந்த ஊணூர் அன்றில் பறவைகளின் புகலிடம்.
மேலும் இவ்வூர் அரசன் வழுதி ‘பசும்பூண்-வழுதி’ எனச் சிறப்பிக்கப்படுகிறான்.
இவ்வூர் திருவுடை வியனகர் எனப் போற்றப்படுகிறது. இவ்வூர் மகளிர் விருந்தினர்க்கு ஊட்டிய மிச்சத்தைப் புறங்கடையில் வீசுவார்களாம். அதனை உண்ட கடற்காக்கை அங்காடித் தெருவில் இளைப்பாறுமாம். பின் இறால் மீனை உண்ண அங்குள்ள கடலில் நிற்கும் வங்கக்-கப்பலின் கூம்பில் தங்குமாம். இப்படியாக ஒரு பாடல் இவ்வூர் பற்றி விளக்குகிறது.
ஊணூர்: ஊணூர் என்னும் சங்ககால ஊர் இக்காலத்துக் கோடியக்கரைப் பகுதியாகும். இதன் கடற்கரைப் பகுதி மருங்கூர்ப் பட்டினம். உள்ளூர்ப் பகுதி நெல் விளையும் நிலம். நெல்(நெல்லரிசி) மக்களுக்கு ஊண்(உணவு). எனவே இந்த ஊரை ஊணூர் என்றது காரணப்பெயர். அன்றில் பறவைகள் மிகுதியாக வாழ்ந்த ஊர் இது.
சங்கப் பாடல்களில் ஊணூர் பற்றியத் தகவல்கள் சில:-
கடலலை மோதிக்கொண்டிருக்கும் ஊர் ஊணூர்.
இது பாதுகாக்கப்பட்ட நெற்களஞ்சியமாக விளங்கியது.
அன்றில் பறவைகளின் புகலிடமாகவும் விளங்கியது. நோலா-இரும்புள் எனப் போற்றப்படும் அன்றில் பறவைகள் கூடி மகிழும் புகலிடம் இந்த ஊணூர்.
இங்குக் கடலில் வலை போட்டால் இறால் மீன் மிகுதியாகப் பெறலாம்.
ஊணூர் அரசன் வாய்மொழித் தழும்பன். இவன் யாழ்ப்பாணர்களின் தலைவன். ஊணூரில் பிச்சை எடுக்கும் யானைகள் வந்து போகும்.
ஊணூரைத் தாண்டிச் சென்றால் மருங்கூர்ப் பட்டினம் என்னும் துறைமுகத்தை அடையலாம்.
ஊணூர் மன்னன் தழும்பனைத் தூங்கல் (தூங்கல் ஓரியார்) என்னும் புலவர் பாடியுள்ளார். இந்தப் பாடல் கிட்டியுள்ள சங்கநூல் தொகுப்பில் இல்லை.
இவ்வூர் மக்கள் நெல் அறுக்கும் அரிவாளால் மீனைச் சீவித் தூய்மை செய்வர்.
இந்த ஊணூர் தழும்பன் ஆட்சியில் படை எடுப்புகளும் நடந்து உள்ளதாகத் தகவல் உள்ளது. இதற்குக் காரணம் மகள் மறுக்கும் மாண்பு என்பது புறப்பாடலால் கிடைக்கும் செய்தி. இந்த மகள் மறுக்கும் மாண்பால் இந்தப் பெண்ணை தேடிய அரசனின் தேர்படையும் யானைப்படையும் இம்மண்ணை பாழ்படுத்தியதாம். இது பழைய கல்வெட்டில் இருந்து பெறப்பட்ட சிறு குறிப்பாகும்.
(இ) நீலகண்ட நகரம்
நீலகண்ட நகரம் என்பது சங்ககாலச் சேரர் துறைமுகமாகும்.
ஆதாரங்கள்
இந்நகர் பெரிப்ளசு காலத்தில் நெல்சின்டா எனவும் ப்ளைனி காலத்தில் நியாசின்டி எனவும் டாலமி காலத்தில் இது மேல்கிந்தா எனவும் குறிக்கப்பட்டுளது. இது பாண்டியர் ஆளுகைக்குள் இருந்ததாகவும் இங்கிருந்தே மிளகு, சீரகம் போன்றவை செங்கடல் துறைமுகங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்நகரத்தின் தற்போதைய நிலை:-
இந்நகரம் தற்போது இருக்கும் இடம் குறித்து அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அதில் கால்டுவெல் இந்நகரம் காநெற்றி எனவும் யூலே இதை கொல்லம் எனவும் கூறுகின்றனர்.
முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர் துறைமுகங்கள் சில:-
சங்ககாலத்துக்குப் பின், முற்கால பாண்டியர் காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர் காலம் வரை பாண்டி நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக உறவுகள் வளரக் காரணமாயிருந்தது. இதன் விளைவாகவே 25 க்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் பட்டினம் என்ற பின்னொட்டு பெயரோடு தோன்றின. அவை அனைத்தும் பின்வருமாறு:
1. தொண்டி (முத்தூர்க்கூற்றம்) திருவாடானை வட்டம்
2. காயல்பட்டினம் திருவைகுண்டம் வட்டம் - தாமிரபரணி ஆறு
3. மானவீரப்பட்டினம் (மானவீரவளநாடு) மருதூர், சாத்தான்குளம் வட்டம், கருமானியாறு
4. பாசிப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்) - திருவாடானை வட்டம் பாசியாறு
5. உலகமாதேவிப்பட்டினம் (செவ்விருக்கை நாடு) - இளங்கோமங்கலம், திருவாடானை வட்டம்
6. நானாதேசிப்பட்டினம் - வீரகேரளபுரம், திருவாடானை வட்டம் -
7. பவித்ரமாணிக்கப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு) - இராமநாதபுரம் வட்டம் கப்பலாறு
8. மேன்தோன்றிப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு) - இராமநாதபுரம் வட்டம்
9. கேரளாந்தகபுரம் (குரங்குடிநாடு) காலம் பொ.பி. 875 - 1090 பட்டினமருதூர், விளாத்திக்குளம் வட்டம் மலட்டாறு
10. குலோத்துங்கச் சோழப்பட்டினம் (மிழலைக்கூற்றம்) பொ.பி. 1090 – 1271 மணமேல்குடி, ஆவுடையார்கோயில் வட்டம் வெள்ளாறு
11. பெரியபட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 1090 – 1368 இராமநாதபுரம் வட்டம் கப்பலாறு
12. குலசேகரப்பட்டினம் (மானவீரவளநாடு) பொ.பி. 1090 - 1368 சாத்தான்குளம் வட்டம் கருமானியாறு
13. ஆவுடையார்பட்டினம் (மிழலைக்கூற்றம்) பொ.பி. 1271 – 1368 ஆவுடையார்கோயில் வட்டம் வெள்ளாறு
14. சுந்தரபாண்டியன் பட்டினம் (முத்தூர்க்கூற்றம்) பொ.பி. 1271 – 1368 திருவாடானை வட்டம் பாம்பாறு
15. நீர்ப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்) பொ.பி. 1271 - 1368 கண்ணங்குடி, திருவாடானை வட்டம்
16. புதுப்பட்டினம் (செவ்விருக்கைநாடு) பொ.பி. 1271 – 1368 திருவாடானை வட்டம்
17. சீவல்லபப்பட்டினம் (செவ்விருக்கைநாடு) பொ.பி. 1271 – 1368 புறக்குடி, திருவாடானை வட்டம்
18. நினைத்ததை முடித்தான் பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 1271 – 1368 கீழக்கரை, இராமநாதபுரம் வட்டம் - குண்டாறு
19. இருவரைவென்றான் பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 1271 – 1368 இராமநாதபுரம் வட்டம்
20. வல்லபப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 1271 – 1368 ஏறிக்கிட்டூர், இராமநாதபுரம் வட்டம்
21. தத்தையார்ப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 1271 - 1368 இராமநாதபுரம் வட்டம்
22. முடிவீரன்பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 1271 – 1368 இராமநாதபுரம் வட்டம்
23. கோதண்டராமன்பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 1271 - 1368 இராமநாதபுரம் வட்டம்
24. ஏறிவீரப்பட்டினம் (அளற்றுநாடு) பொ.பி. 1271 – 1368 இடைவழி, முதுகுளத்தூர் வட்டம்
25. வென்று முடிசூடிய சுந்தரபாண்டியப்பட்டினம் (பராந்தகவளநாடு) பொ.பி. 1271 – 1368 ஸ்ரீவைகுண்டம் வட்டம்
26. காயல்பட்டினம் (குடநாடு) பொ.பி. 1271 – 1368 திருச்செந்தூர் வட்டம் - தாமிரபரணி
27. சோனாடுகொண்டான்பட்டினம் (குடநாடு) பொ.பி. 1271 – 1368 திருச்செந்தூர் வட்டம் - பாம்பாறு
28. வீரபாண்டியன்பட்டினம் (குடநாடு) பொ.பி. 1271 - 1368 திருச்செந்தூர் வட்டம் -பாம்பாறு
29. முத்துராமலிங்கப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்) - திருவாடானை வட்டம் பாசியாறு
30. அம்மாப்பட்டினம் - ஆவுடையார்கோயில் வட்டம் அம்புலியாறு
மேற்கண்ட துறைமுகங்கள் இருந்தமைக்கான தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள் பின்வருமாறு:-
முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மேற்கண்ட துறைமுகப் பட்டினங்கள் பற்றி அறிய தொண்டி, பெரியபட்டினம், பழைய காயல், போன்ற பல இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளும், அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா போன்ற பல்வேறு நாட்டவர் குறிப்புகளும், அவை தவிற கல்வெட்டுகள், இலக்கியங்கள், அகழாய்வில் கிடைத்த நாணயங்கள் போன்றவையும் துணை புரிகின்றன.
வணிகப் பொருட்கள்
இந்தத் துறைமுகங்களிலிருந்து நெல், அரிசி, உப்பு, அவிழாகட்டு, பயித்தம் பருப்பு, அவரை, துவரை, ஆமணக்கு, எள், கடுகு, சீரகம், வெங்காயம், புளி, கருப்பட்டி, மஞ்சள், பாக்கு, மிளகு, சுக்கு, தேன், சந்தனம், அகில், பன்னீர், கற்பூரம், சாந்து, புனுகு, கஸ்தூரி, சவ்வாது, புடவை, பருத்திப் புடவை, நூல் புடவை, நொய் புடவை, பரும்புடவை, பட்டு, நூல், கொடி, கணபம், இரும்பு, செம்பு, வெண்கலம், குதிரை, யானை, ஒட்டகம், சவுரி மயிர், முத்து, சிப்பி, மணிகள் போன்றவை ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகக் கல்வெட்டுகளில் உள்ளது.
வணிக நகரங்கள்
கடலோர வணிகத் துறைமுகங்கங்களுக்குத் துணையாக உள்ளூர் வணிக நகரங்களும் அமைந்திருந்தன. கடற்கரைத் துறைமுகப்பட்டினங்களும் உள்ளூர் வணிக நகரங்களும் பெருவழிகளால் இணைந்திருந்தன. இதற்கு உதாரணமாக மதுரையிலிருந்து தொண்டி செல்லும் பெருவழியிலேயே இடையாற்று நாட்டு பூவேந்தியபுரமும், தென்களவழிநாட்டு முடிகொண்ட பாண்டியபுரமும் இருந்ததையும், அதே போல் கீரனூர் கூற்றத்து கங்கைகொண்ட பெருந்தெருவும், காணப்பேர்கூற்றத்து கானபேர் பெருந்தெருவும் முத்தூர் கூற்றத்தையும் பல துறைமுகங்களையும் இணைத்ததையும் கொள்ளலாம்.
வணிகக் குழுக்கள்:-
இத்துறைமுக மற்றும் வணிக நகரங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்றுமதியைக் கண்காணிப்பதற்கான உள்ளூர் வணிகர்கள், பண்டங்களை மாற்றுவதற்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இடைத்தரகர்கள், இறக்குமதியைக் கவனிக்கும் வெளிநாட்டு வணிகர்கள் போன்றோர்கள் அமைத்த நகரங்களும் பட்டினங்களும் இருந்தன. அவற்றுள் பல வணிகக் குழுக்கள் இருந்தன. அந்தக் குழுக்கள் பற்றிய விவரங்களும் பின்வருமாறு:-
நகரத்தார் - முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் இந்நகரத்தின் கட்டுப்பாடு அரச குடும்பத்தின் கீழமைந்த நகரத்தார் என்னும் வணிகக் குழுக்களிடம் இருந்தது.
மணிக்கிராமத்தார், சாமக பண்டசாலிகள் - இவர்கள் மேற்கு கடற்கரைகளுக்கும் தமிழகத்துக்கும் நடக்கும் வணிகத்தைக் கவனிப்பவர்கள்.
நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர், பதினெண் விசயத்தார் - இவ்வணிகக் குழுக்கள் தென்னிந்தியா முழுவதுமே புகழ் பெற்று விளங்கியவை.
தென்னிலங்கை வளஞ்சியர் - இவர்கள் தென்னிலங்கையிலிருந்து பாண்டியர் பட்டினங்கள் மூலமாக வணிகம் செய்தவர்கள். இவர்களின் குடியிருப்புகள் அருப்புக்கோட்டை, சோழபுரம் முதலிய ஊர்களில் இருந்ததை அடுத்து இவர்களின் வணிகம் தமிழகத்தில் அக்காலத்தில் நிலையானதொன்றாய் இருந்ததை அறிய முடியும்.
சோனகரர் - இவர்கள் அரேபிய வணிகக் குழுக்களுள் ஒரு குழுவினர்.
அஞ்சுவண்ணம் - இவர்களும் அரேபியர்களே. இவர்களைப் பற்றிய ஆய்வு நூல்கள் பல தமிழில் வந்ததை வைத்தே இவர்களின் சிறப்பை அறியலாம்.
மேற்கண்ட இந்த வணிகக் குழுக்கள் அளித்த வரிகளும் கொடைகளும் :-
மேற்குறிப்பிட்ட வணிகக்குழுக்கள் அனைத்துமே ஏதாவது ஒரு விதத்தில் கோயில்களுக்குக் கொடையோ அல்லது பெருவழிகளின் உபயோகத்திற்காக வரியோ செலுத்தி அரசாங்கத்துக்கு உதவியதாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் நானாதேசிகள், திசையாயிரத்து ஐநூற்றுவர் போன்றோர்கள் உலகமாதேவிப்பட்டினம் என்ற ஊரில் உள்ள திருஞான சம்பந்தன் தளம் என்ற கோவிலிற்குப் பல கொடைகளை அளித்துளனர். இக்கோயிலுக்கான பாக்கு, மிளகு போன்றவற்றிற்கு ஆட்சுமைக்கு ஒருமாப்பணமும் உறுக்களில் ஏற்றும் சிறுகலங்களின் கட்டொன்றிற்கு அரைக்கால் பணமும் வாங்கி உள்ளனர். மேலும் இப்பட்டினத்திற்கு வரும் சிற்றுரு, தோணி போன்ற கலங்களில் வரும் பொருட்களுக்கு முறையே அரைக்கால் மற்றும் கால் பணமும் வாங்கியுளனர்.
காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம் போன்ற பட்டினங்களிலிருந்து வரும் பெரும் வழிகளை உபயோகிக்கும் மற்ற வணிகர்களிடமிருந்து வரும் வரிகளை வீரபாண்டியன் புரத்து கோயிலொன்றுக்கு அளித்துள்ளனர். நினைத்ததை முடித்தான் பட்டினத்தில் இருந்த முத்து வணிகர்களான திசையாயிரத்து ஐநூற்றுவர் அதில் பெறப்படும் வரியை அவ்வூர்க் கோயிலுக்குத் தானமளித்துளனர்.
காவிரிப்பூம்பட்டினம் (என்னும் புகழ் பெற்ற துறைமுகம்)
காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்), பண்டைய தமிழ் நாட்டிலிருந்த முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந் நகரம், காவேரிப் பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இதன் வணிக முக்கியத்துவம் காரணமாக, பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கே வந்தார்கள். அவர்களுக்கான குடியேற்றங்களும் இப் பட்டினத்தில் காணப்பட்டதாகச் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் கூறுகின்றன.
சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்:
கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம் (ஆதாரம் பட்டினப்பாலை)
எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம் (ஆதாரம் சிறுபாணாற்றுப்படை)
நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம் (ஆதாரம் பெரும்பாணாற்றுப்படை)
காவிரிப்பூம்பட்டினம் பெயர் வரலாறு:-
காவிரி ஆறு கடலில் புகுமிடத்தில் இருந்த பட்டினம் > காவிரிப்பூம்பட்டினம்
ஆறு புகுமிடம் என்பது 'புகும் ஆறு' என மருவிப் 'புகாறு' ஆகி, மேலும் மருவிப் 'புகார்' என நின்றது. (இக்காலத்தில் அடையாறு புகுமிடம் 'அடையார்' என வழங்கப்படுவதை ஒப்புநோக்கிக்கொள்க)
கடற்கோள்
மணிமேகலை வஞ்சிமாநகரில் சமயக் கணக்கர்களிடம் பல்வேறு சமயநெறிகளைக் கேட்டறிந்து கொண்டிருந்த காலத்தில் புகார் நகரம் கடலால் கொள்ளப்பட்டது. அப்போது பௌத்த துறவி அறவண அடிகள், பௌத்த துறவறம் மேற்கொண்டிருந்த மாதவி முதலானோர் தப்பிப் பிழைத்து, காஞ்சிபுரம் வந்து சேர்ந்தனர்.
இந்த நகரம் பற்றிப் பட்டினப்பாலை கூறும் செய்திகள்
வளம் நிறைந்த தெருக்கள் - கடல் வழியே வந்த சவாரிக் குதிரைகள், வண்டியில் வந்த மிளகு மூட்டைகள், வடமலையில் பிறந்த மணிக்கற்கள், மேற்கு மலையில் பிறந்த சந்தனம், அகில், தென்கடல் முத்து, கீழைக்கடல் பவளம், கங்கை, காவிரி-வெளி விளைச்சல்கள், ஈழத்து உணவு, காழகத்து ஆக்கம் முதலான பண்டங்கள் தெருக்களில் மண்டிக்கிடந்தன.
இதே போல வஞ்சி சேரர்களின் துறைமுகமாக இருந்தது. ஆனால், அது பற்றி அதிகக் குறிப்புகள் காணக் கிடைக்கவில்லை.
