தமிழகத்தில் கிடைத்த வேற்று மாநிலத்தவர் நாணயங்கள்

bookmark

சங்ககாலத் தமிழருக்கும் ஆந்திர மன்னர்களான சாதவாகனர்களுக்கும் நல்ல உறவு இருப்பது அவர்கள் வெளியிட்ட காசுகள் அதிகளவு தமிழகத்தில் கிடைத்திருப்பதைக் கொண்டு நிறுவலாம். வசிட்டிபுத்திர சிரிபுலுமாவி, வசிட்டிபுத்திர சிவ சிரிபுலுமாவி, வசிட்டிபுத்திர சாதகர்ணி மற்றும் கௌதமி புத்ர சாதகர்ணி போன்ற மன்னர்களின் நாணயங்களே அதிகளவில் உள்ளன. இந்நான்கு மன்னர்களின் நாணயங்களிலும் முன் பக்கத்தில் யானை மற்றும் அம்மன்னனின் தலையும் பின் பக்கத்தில் உச்சயினி குறியீடும் காணப்படும். மன்னனின் தலைப்பகுதியின் ஒரு பக்கம் அவனது பெயர் தமிழிலும் மற்றொரு பக்கத்தில் பிராகிருதத்திலும் காணப்படும். இவற்றில் காணப்படும் தமிழ் எழுத்துகள் மாங்குளம் கல்வெட்டுகளில் உள்ள தமிழ் போல் காணப்படுகிறது. சாதவாகனர் காசுகள் செய்ய பயன்படுத்திய ஐந்து வார்ப்புக்கூடுகள் தமிழகத்தில் மேற்க் கொள்ளப்பட்ட காஞ்சிபுரம் அகழாய்வில் கிடைத்துளன.

அயல்நாட்டுத் தொடர்புகள்

அரிக்கமேட்டில் கிடைத்துள்ள உரோமப் பேரரசன் அகஸ்டஸ் காலத்து நாணயங்களும் அவரையடுத்து வந்த மன்னர் காலத்து நாணயங்களும் சங்க இலக்கியத்தில் காட்டிய படி அயல் நாடுகளுடன் தமிழகத்திற்கு இருந்து வந்த வணிகத் தொடர்புகளை நிலை நாட்டுகின்றன. கர்நாடக மாநிலத்தில் சந்திரவல்லியில் கண்டெடுக்கப்பட்ட கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய சீன நாணயம் ஒன்று சீனர்களோடு தமிழகத்துக்கு இருந்த தொடர்பினை விளக்குகிறது.

கிரேக்கர்

கரூரில் கிரேக்கக் காசு

தமிழகத்தில் கிடைத்த கிரேக்கக் காசுகளின் பழமை பொ.மு. 300 வரை செல்லும். மேலும், கிடைத்துள்ள காசுகள் பல எந்த நகரத்தில் அச்சிட்டது என்பதைக் கூட அறிய முடிகிறது. கரூர் நகரிலே அதிகக் காசுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இக்காசுகளைக் கொண்டு கிரேக்கத் தீவுகளான ரோட்சு, கிறீட்சு, திரேசு, தெசிசு போன்றவற்றுக்கும் தமிழகத்துக்கும் இருந்த வணிகத் தொடர்புகளையும் கிரேக்க நாகரிக கடவுளர்களையும் அறிய முடிகிறது. மேலும், கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் மரணத்துக்குப்பின் டைகிரிசு நதியில் ஆதிக்கம் செலுத்திய செலியூசிட் வம்சத்தவர் வெளியிட்ட பத்து காசுகள் கரூர் நகர அமராவதி ஆற்றங்கரையில் கிடைத்துளன. இவற்றைக் கொண்டு கரூர் நகரை மையமாக கொண்ட வர்த்தகத்தில் கரூரிலிருந்து சேரர் துறைமுகம் முசிறிக்கு பொருட்கள் கொண்டு சென்று பின் மெசொப்பொத்தேமியா நகரங்களுக்கு எடுத்துச் சென்றனர் என்ற கருதுகோளை உறுதிப்படுத்தினர்.

புதுக்கோட்டையில் அகசிட்டசு மன்னர் நாணயம்

உரோமானியர்

உரோமானிய வெள்ளிக் காசு ஒன்று கொங்கு நாட்டிலுள்ள திருப்பூரில் கிடைத்துள்ளது. இத்தகைய தொடர்பால், கருத்துப் பரிமாற்றங்களும், பண்ட மாற்றங்களும், பண்பாட்டுத் தாக்கங்களும் நிகழ்ந்துள்ளமையை அறிய முடிகிறது. தமிழகத்தில் கிடைத்த ரோமானிய நாட்டு மன்னர்களான அகசிட்டசு, தைபிரியசு, கலிகுலா, கிளாடியசு, நீரோ ஆகியவர்களின் நாணயங்களைக் கொண்டு, வரலாற்றாய்வாளர்கள் எந்தெந்த மன்னரின் காலத்தில் ரோமானியர் எந்த அளவு தமிழகத்துடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை அறிகின்றனர். இந்த ரோமானிய நாணயங்களை ஆராய்ந்தோர் இதற்குச் சமமான நாணயங்கள் வேறெங்கும் கிடைக்கப்பெறாததால் இவை வெறும் காசுகளாக மட்டும் பயன்படாமல் பெரும் மதிப்புமிக்க பொருட்களாகவும் பயன்பட்டன எனக் கருதுகின்றனர். இதனாலேயே பெருமளவு நாணயங்கள் குவியல்களாக புதைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். பிளினி என்ற ஆசிரியர் அரை மில்லியன் செசுட்டெர்செசு (Sesterces) தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது எனக்கூறி, இவ்வாறு தங்கம் ரோமை விட்டு வெளியேறுவது அந்நாட்டின் திரைச்சேரியைப் பாதிக்கும் என கவலை தெரிவித்ததை வைத்து அக்கால ரோம தமிழக வாணிபத் தொடர்புகள் எந்தளவுக்குச் சிறந்திருந்தது என்பதை அறியலாம்.

தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் உரோம நாட்டுடன் வாணிபத் தொடர்பு இருந்திருக்கிறது. இதற்குத் தமிழகத்தில் கிடைத்த உரோமானியக் காசுகள் சான்று பகர்கின்றன. சேரநாட்டின் மிளகு, பாண்டிய நாட்டின் முத்து, சோழநாட்டின் துணிவகைகள் உரோமநாட்டு மக்களை மிகவும் கவர்ந்தன. உரோமானியர்கள், பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்த காசுகளைக் கொடுத்து தமிழ்நாட்டிலுள்ள மேற்குறிப்பிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். இதற்குச் சான்றாகப் பல உரோமானியக் காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன.

சீன நாணயங்கள்

பண்டைய தமிழகமும் சீனாவும் கொண்டிருந்த வாணிபத் தொடர்பின் எச்சங்களாகத் தமிழகத்தில் கிடைத்த சீன நாணயங்கள் விளங்குகின்றன சீன தேசத்து இலக்கியங்கள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தோடு நிலவிய வாணிப உறவுகள் பற்றிக் குறிக்கின்றன. கி.மு. 2 ஆம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் பட்டுக்கோட்டை வட்டம் 'ஒலயக் குன்னம்' என்ற ஊரிலும், மன்னார்குடி வட்டத்திலுள்ள 'தாலிக்கோட்டை' என்ற கிராமத்திலும் அதிக சீன நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் சீனத்திற்கும் பண்டைய தமிழகத்திற்கும் இடையே பெரும் வாணிபத் தொடர்பு இருந்து வந்தது தெரியவருகிறது. சீனத்துடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிபத் தொடர்பு மிகவும் பழைமையானதாகும். இத்தொடர்பு கி.மு. 1000 ஆண்டளவில் தொடங்கியிருக்கலாம் என்பர். தமிழகத்துப் பண்டங்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின என்று அந்நாட்டு வரலாறுகள் அறிவிக்கின்றன.

தென்கிழக்கு ஆசிய நாடுகள்

பண்டைய தமிழர்கள் மேலை நாட்டாருடன் மட்டும் கடல் வாணிபம் கொண்டிருக்கவில்லை. கீழை நாடுகளான சீனம், மலேசியா, ஜாவா, வட போர்னியா போன்ற நாடுகளுடனும் கடல் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். தாய்லாந்திலும், சீனாவிலும் சோழக்காசுகள் கிடைத்தைக் கொண்டு கிழக்காசிய நாடுகளுடனான சோழர் தொடர்பும் உறுதிப்பட்டுள்ளது. வரலாற்றாளர்கள், அதே போல் தமிழகத்தில் கிடைத்த பினிசிய மன்னர்களின் காசுகளைக் கொண்டும், சசானிய மன்னர்களின் காசுகளைக் கொண்டும் அந்தந்த நாடுகளுடனான தமிழகத்தின் தொடர்பையும் அறிய முடிந்தது.

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தாய்லாந்துடன் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பண்டைய தமிழகம் கடல் வாணிபத் தொடர்பினை வைத்திருந்தது தெரிய வருகிறது. அங்கு இந்தியாவிற்குச் சொந்தமான கர்னீலியன் மணிகள், கண்ணாடி மணிகள், கர்னீலியன் முத்திரைகள் போன்றவை கிடைத்துள்ளன. மேலும் சோழ மன்னரின் செப்பு நாணயமும் கிடைத்துள்ளது. இதன் மூலம் பண்டைய தமிழர் அந்நாட்டுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

கிழக்காசிய நாடுகளுக்கும், ரோமாபுரிக்குமிடையே நடைபெற்று வந்த கடல் வாணிபத்தில் தமிழகமும் பெரும்பங்கு ஏற்று வந்தது. சீனம், மலேசியா, ஜாவா போன்ற நாடுகளிலிருந்து பல பண்டங்களைக் கொள்முதல் செய்து அவற்றை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.