தமிழகச் சோழர்கள்
சங்க கால மன்னரான கரிகால் பெருவளத்தான்(கரிகால சோழன்) ஆட்சிக்குப் பின் சோழ நாடு களப்பிரர் படையெடுப்பால் வீழ்ச்சியடைந்தது. அச்சுத விக்கிராந்தகன் என்னும் களப்பிர மன்னன் சோழநாட்டை ஆண்டான். அச்சுதனின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு களப்பிரர்களை முறியடித்த பல்லவர்களும், பாண்டியர்களும் தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர், தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் குறிப்பாக உறையூர், பழையாறை போன்ற பகுதிகளில் ஏறத்தாழ நூறாண்டுகள் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர். இக் காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்களைப்ற்றி அறிய முடியவில்லை, இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாகக் கூறும்போது, காவிரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்றுச் செய்திகளைத் தரவில்லை. இதன் காரணமாகக் கி.பி. 3-ம் அல்லது 4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை சோழர்களைப் பற்றிய செய்திகள் கிடைக்கப் பெறவில்லை.
தமிழகத்தில் இருந்த சிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். வடக்கிலும் தெற்கிலும் புதிதாக ஏற்பட்ட அரசுகள் சோழ மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும் இவர்களது பழம் புகழை மதிக்கின்ற வகையில், சோழர்குல மகளிரை மணந்ததோடு, தம்மிடம் பணியாற்ற விரும்பிய சோழ இளவரசர்களுக்குப் பதவிகளையும் அளித்தனர்.பல குறுநில மன்னர்களோடு திருமணத் தொடர்பு கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். இறுதியில் உறையூரை ஆண்ட சிற்றரசனான விசயாலய சோழன், களப்பிர மன்னர் குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான்.
